தமிழகத்தில் நேர்மை, எளிமைக்கு இலக்கணமாக போற்றப்படும் ஒப்பற்றத் தலைவர் கக்கன். சுதந்திரப் போராட்ட வீரர், நாடாளுமன்ற உறுப்பினர், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர், தமிழகத்தின் உள்துறை, விவசாய அமைச்சராகவும் பொறுப்புகளை வகித்தவர். கக்கன் மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்திலுள்ள தும்பைப்பட்டி என்ற ஊரில் 1908 -ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18ம் தேதி பிறந்தார்.
இவரின் தந்தை பூசாரி கக்கன், தொடக்கக் கல்வியை மேலூர் திருமங்கலம் அரசு மாணவர் விடுதியில் தங்கி, பி.கே.என். ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். மதுரை வைத்தியநாத ஐயர் இவரைத் தன் வளர்ப்பு மகனாக அரவணைத்துக் கொண்டார்.
கக்கன் தனது பள்ளிப் பருவத்திலேயே, காங்கிரசில் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். அன்றைய காலகட்டத்தில் பட்டியல், பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் கோயில்களில் நுழைவது மறுக்கப்பட்ட நிலையில், 1939ம் ஆண்டு இராஜாஜி ‘கோயில் உள்நுழைவு உரிமை சட்டத்தினைக் கொண்டு வந்ததன் விளைவாக, மதுரையில் கக்கன் மறுக்கப்பட்ட ஜாதி நபர்களுடன், மதுரை மீனாட்சி கோயிலினுள் நுழைந்தார். கக்கன் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்திலும் பங்கேற்றதால், அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
1946-ல் நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றார். 1952ம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். காமராஜர் தமிழகத்தின் முதல்வரானபோது, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்றார்.
1957ம் ஆண்டு காங்கிரஸ் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை, ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை ஆகிய துறைகளின் அமைச்சர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தொடர்ந்து விவசாயம், உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.
இவரது ஆட்சிக்காலத்தில் மேட்டூர், வைகை, வீடூர் அணைகள் கட்டப்பட்டன.
ஆதிதிராவிட மக்களின் முன்னேற்றத்திற்காக தாழ்த்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் ஆயிரக்கணக்கான பள்ளிகளைத் திறந்தார். அவர்களுக்கென வீட்டு வசதி வாரியம் அமைத்தார்.
மேலும், காவல் துறையில் காவலர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியது, லஞ்ச ஒழிப்புத் துறையைத் தொடங்கியது, கூட்டுறவு விற்பனைக் கூடங்களைத் தொடங்கி வைத்தது உட்பட ஏராளமான நலத் திட்டங்களை செயல்படுத்தினார். விவசாய அமைச்சராகப் பொறுப்பில் இருந்த காலத்தில் இரண்டு வேளாண்மைப் பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டன.
1967-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், மேலூர் (தெற்கு) தொகுதியில் தோற்ற பின், 1969 முதல் 1972 வரை தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பு வகித்தார். 1973-ம் ஆண்டு அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார்.
விடுதலைப் போராட்டத் தியாகத்துக்காக அவருக்கு வழங்கப்பட்ட நிலத்தை வினோபாவின் பூதான இயக்கத்துக்கு அளித்துவிட்டார். கக்கன் தீவிர சமயப்பற்றுள்ளவராக இருந்தார். மகாத்மா காந்தியின் வழியைப் பின்பற்றினார்.
ஈ.வே. ராமசாமி, கடவுள் ராமனின் உருவப்படம் எரிப்புப் போராட்டம் நடத்தியபோது, இது ஒரு சமூக விரோதச் செயல் என்றும், சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட காந்தியின் நம்பிக்கைக்குரிய கடவுளை அவமதிப்பதாகும் என்று கருத்து தெரிவித்தார்.
கக்கன் 1981-ம் ஆண்டு அக்டோபர் மாதம் உடல்நலக் குறைவால், சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சில நாளில் நினைவிழந்த கக்கன், நினைவு திரும்பாமலேயே, 1981 டிசம்பர் 23ம் நாள் மறைந்தார். பாரத அரசு இவரின் உருவப்படம் பொறித்த சிறப்பு அஞ்சல் தலையை, 1999- ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது.