வங்கிக் கடன் மோசடி வழக்கில் சிக்கி லண்டனுக்கு தப்பிச் சென்ற தொழிலதிபர் நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தும் வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.
இதுகுறித்து, மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறும்போது, “முன்னாள் நீதிபதியும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான அபய் திப்சே, நீரவ் மோடிக்கு ஆதரவாக லண்டன் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்து வாதாடியுள்ளார். அபய் திப்சே காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக இருப்பவர். நீரவ் மோடிக்கு எதிராக சிபிஐ சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை இந்திய சட்டத்தின் கீழ் ஆய்வு செய்ய முடியாது என்று திப்சே கூறியிருக்கிறார். இதன் மூலம் நீரவ் மோடியை காப்பாற்ற காங்கிரஸ் கட்சி முயற்சிப்பது தெளிவாகிறது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமானவர் அபய். அபய் திப்சேவின் வாதம் அடிப்படையற்றது. நீரவ் மோடியை இந்தியா கொண்டு வர மத்திய அரசு தொடர்ந்து தீவிரமாக முயற்சிக்கிறது. ஆனால், காங்கிரஸ் அதைத் தடுக்கிறது. நீரவ் மோடியைக் காப்பாற்றுவதற்காக அபய் திப்சேவை காங்கிரஸ் நியமித்துள்ளது” என்றார்