கிடுக்கு பிடியில் விஜய் மல்லையா, கெஞ்ச விடும் ராஜதந்திரம்

மதுபான ஆலை, விமான நிறுவனம் என பல்வேறு தொழில்களை நடத்திய தொழிலதிபர் விஜய் மல்லையா, பல்வேறு இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்குத் தப்பி ஓடினார். அவரைத் தாயகம் அழைத்து வரும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.

இந்தியப் பொருளாதாரத்தை மீ்ட்டெடுக்க பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடி திட்டங்களை அறிவித்ததை தொழிலதிபர் விஜய் மல்லையா தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார். மேலும், தன்னுடைய கோரிக்கையையும் மத்திய அரசு ஏற்று வழக்குகளைக் கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

விஜய் மல்லையா ட்விட்டரில் பதிவி்ட்ட கருத்தில், “கரோனா வைரஸிலிருந்து பொருளாதாரத்தை மீட்க இந்திய அரசு ரூ.20 லட்சம் கோடிக்கான திட்டங்களை அறிவித்ததமைக்கு நான் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். இந்திய அரசு அவர்களின் தேவைக்கு ஏற்றார்போல் ரூபாய் நோட்டுகளை அச்சிடலாம். ஆனால், என்னைப் போன்ற சிறு பங்களிப்பாளர் 100 சதவீதம் கடனை வங்கிகளிடம் திருப்பிச்செலுத்துகிறேன் எனப் பலமுறை கோரிக்கை விடுத்தும் தொடர்ந்து புறந்தள்ளப்படுகிறது.

நான் வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய அனைத்துக் கடன்களையும் செலுத்திவிடுகிறேன், நிபந்தனையில்லாமல் ஏற்றுக்கொண்டு, எனக்கு எதிரான வழக்குகள் அனைத்தையும் கைவிடுங்கள் என மத்திய அரசிடம் கேட்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.