நிர்வாகிகள் மீது பொய் வழக்கு ஹிந்து முன்னணி ஆவேசம்

கோவில் நிலத்தை மீட்க போராடிய ஹிந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினர் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும்’ என, ஹிந்து முன்னணி தெரிவித்துள்ளது.

அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:

திருநெல்வேலி, கருப்பந்துறை கிராமத்தில் உள்ள அழியாபதீஸ்வரர், சிவகாமி அம்பாள் கோவிலுக்கு பாத்தியப்பட்ட நந்தவன நிலம், 70 சென்ட் உள்ளது. தற்போதைய மதிப்பு, 2 கோடி ரூபாய். இந்த இடத்தில், கடந்த சில ஆண்டுகளாக, அக்கிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் தர்மராஜ் என்பவர் செங்கல் சூளை, கோழிப்பண்ணை மற்றும் தற்காலிக சர்ச் அமைத்து, சட்ட விரோதமாக ஆக்கிரமித்து வைத்திருந்தார். உரிய ஆவணங்களுடன், ஹிந்து சமய அறநிலையத் துறையிடம் புகார் அளித்த பிறகும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், கடந்த மாதம் ஹிந்து முன்னணி சார்பில், போராட்டம் நடந்தது. தொடர்ந்து, கோவில் நிர்வாகம், அந்த இடத்தை அளவீடு செய்து எல்லை கற்களை நாட்டியது. ஆனால், உள்ளே இருந்த சர்ச் உள்ளிட்ட கட்டடங்கள் அகற்றப்படவில்லை. இதுதொடர்பாக, ஹிந்து முன்னணி மாவட்ட செயலர்கள் சங்கர், சுரேஷ் ஆகியோர் கலெக்டரிடம் புகார் அளித்தனர்.

இச்சூழலில் சிலர், சங்கர் நடத்தி வரும் கடையில், அவர் இல்லாத நேரத்தில் போதையில் தகராறு செய்தனர். அவரின் மனைவி, மகனை தாக்கினர். புகாரின் படி, இருவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.

தகராறு செய்த நபர், தன்னை ஜாதி பெயர் சொல்லி திட்டியதாக, சங்கரின் மனைவி மற்றும் மகன் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தர்மராஜ் புகாரின் படி, ஹிந்து முன்னணி மாநில செயலர் குற்றாலநாதன் உட்பட, 12 பேர் மீது பொய் வழக்கு பதிவு புனையப்பட்டுள்ளது. இதை ஹிந்து முன்னணி கண்டிக்கிறது. காவல்துறை விசாரணை நடத்தி, பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.