இந்திய நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5போட்டிகள் கொண்ட டி20 தொடரின் மூன்றாவது ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. போட்டியின் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி இந்தியாவை பேட்டிங் செய்ய கூறியது. முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 179 ரன்களை எடுத்தது. இந்திய தரப்பில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 40 பந்துகளில் 65 ரன்களையும், லோகேஷ் ராகுல் 19 பந்துகளில் 27 ரன்களையும், விராட்கோலி 27 பந்துகளில் 38 ரன்களையும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் கமீஸ் பென்னட் 3 விக்கெட்களையும், மிட்செல் சான்ட்னர், கிராண்ட் ஹோம் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணியின் மார்ட்டின் கப்டில் 21 பந்துகளில் 31 ரன்களையும், வில்லியம்சன் 48 பந்துகளில் 95 ரன்களையும், இறுதியில் களமிறங்கிய ரோஸ் டெய்லர் 21 பந்துகளில் 31 ரன்களையும் எடுத்தனர். 20 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணியும் 179 ரன்களை எடுத்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது. கடைசி ஓவரில் இந்தியாவின் முஹம்மது சமி 95 ரன்கள் எடுத்திருந்த நியூசிலாந்தின் அனுபவ வீரர் வில்லியம்சனையும் கடைசி பந்தில் ரோஸ் டைலரையும் வீழ்த்தி போட்டியை சூப்பர் ஓவருக்கு கொண்டு செல்ல உதவினார். இந்திய தரப்பில் முஹம்மது சமி, சர்துல் தாக்குர் தலா இரு விக்கெட்களையும் யுஸ்வேந்திர சஹல், ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதை தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்ற சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி சூப்பர் ஓவரின் முதல் பந்தில் ஒரு ரன்னும் இரண்டம் பந்தில் ஒரு ரன்னும் மூன்றாம் பந்தில்ஆறு ரன்களையும் எடுத்தனர். நான்காம் பந்தில் நான்கு ரன்களும் ஐந்தாம் பந்தில் ஒரு ரன்னும், ஆறாம் பந்தில் நான்கு ரன்களையும் விளாசினர். இதன்மூலம் சூப்பர் ஓவரில் நியூசிலாந்து அணிக்கு 17 ரன்கள் கிடைத்தது. இந்திய அணியின் வெற்றிக்கு 18 ரன்கள் இலக்காக நிர்ணயித்ததை தொடர்ந்து லோகேஷ் ராகுலும் ரோகித் ஷர்மாவும் களமிறங்கினர். முதல் பந்தில் இரு ரன்களும் இரண்டாம் பந்தில் ஒரு ரன்னும் மூன்றாம் பந்தில் நான்கு ரன்களும் நான்காம் பந்தில் மீண்டும் ஒரு ரன்னும் ஐந்தாம் ஆறாம் பந்துகளில் இரு இமாலய சிக்ஸர்களையும் விளாசி இந்திய அணிக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்தனர். ஐந்து போட்டிகளை கொண்ட தொடரில் இந்திய அணி தொடர்ச்சியாக மூன்று போட்டிகளை வென்றதன்மூலம் டி20 தொடரை நியூசிலாந்து மண்ணில் கைப்பற்றியுள்ளது.
ஒரு கட்டத்தில் வெற்றியானது இந்தியாவின் கையைவிட்டு விலகிய நிலையில் கடைசி ஓவரை வீசிய முஹம்மது சமி தனது அபார பந்து வீச்சால் நியூசிலந்து அணியின் முக்கிய இரு வீரர்களை வெளியேற்றி இந்திய அணி சூப்பர் ஓவர்க்கு செல்ல வழி வகுத்தார். ஆட்ட நாயகனாக ரோஹித் ஷர்மா தேர்ந்த்தெடுக்கப்பட்டார். இந்திய அணி பேட்டிங்கில் வரிசையில் வலிமையானது என்பதை நியூசிலாந்து மண்ணிலும் நிருபித்துள்ளது.