எப்போதும் துடுக்குத்தனமாகவே பேசி வம்பில் அடிக்கடி சிக்கிக்கொள்ளும் தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தங்கள் இயக்கம் பல துரோகிகளை கடந்து வெற்றி கண்டது என்று கூறியிருந்தார். மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரை துரோகிகள் பட்டியலில் வரிசைப்படுத்தியிருந்தார் துரைமுருகன். இதற்கு அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். எம்.ஜி.ஆரை கட்சியை விட்டு நீக்கியது, கச்சத்தீவை தாரை வார்த்தது. ஜல்லிக்கட்டு தடை என கருணாநிதியின் துரோகங்களை பட்டியலிட்ட அவர்கள், அவர் மறைவிற்கு பின்னர் அந்த பணியை துரைமுருகன் செய்து வருகிறார் என கூறியுள்ளனர். இதேபோல வேலூர் மாவட்டத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில் பேசிய துரைமுருகன், அரசு டவுன் பஸ்களில், இலவச பயணம் செய்யும் பெண்களை கண்டக்டர்கள் தரக்குறைவாகப் பேசினால் அவர்களைத் தாக்குங்கள் என பேசியதை கண்டித்து தஞ்சாவூர் ஜெபமாலைபுரத்திலுள்ள அரசுப் போக்குவரத்து கழக நகரப் பணிமனையில், டிரைவர்களும் கண்டக்டர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தி.மு.கவின் தொழிற்சங்கமான தொ.மு.ச உட்பட அனைத்து தொழிற்சங்கத்தினரும் பங்கேற்றனர்.