கடந்த 1955-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத்தில், அண்டை நாடான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து குடிபெயர்ந்து 12 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கும் ஹிந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சி இனத்தவர், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
அந்தச் சட்டத்தில், உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், குறைந்தது 5 ஆண்டுகள் இந்தியாவில் வசித்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதிக்கு முன் குடியேறியவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்றும் இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கெனவே கடந்த ஜனவரி மாதம், இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. எனினும், மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவில்லை. அதற்குள் 16-ஆவது மக்களவையின் பதவிக்காலம் முடிவுக்கு வந்து விட்டதால் இந்த மசோதா காலாவதியாகிவிட்டது. இதைத் தொடர்ந்து, தற்போது இந்த மசோதா மக்களவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாளை மாநிலங்கவையில் நிறைவேற்ற பட உள்ளது.
பாஜகவின் கணக்கின்படி, மாநிலங்களவையின் மொத்த பலம் 238 ஆகும். இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் பாஜகவின் 83 உட்பட மொத்தம் 105 ஆக உள்ளது. மேலும் அதிமுக (11 உறுப்பினர்கள்), பிஜு ஜனதா தளம் (7), ஒய்எஸ்ஆர்சிபி (2) மற்றும் தெலுங்கு தேசம் (2) உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவையும் பாஜக கோரி வருகிறது. இந்த 22 உறுப்பினர்களின் ஆதரவைச் சேர்த்தால் மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 127 ஆகிறது. இதன்மூலம், பெரும்பான்மைக்குத் தேவையான 120-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கிறது. எனவே, மாநிலங்களவையிலும் இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறும் என்ற மிகுந்த நம்பிக்கையில் பாஜக உள்ளது.