திருவண்ணமலை கோயிலில் மஹா தீபம் ஏற்ற பட்டது

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கடந்த, டிச.,01ல் தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்வாக இன்று(டிச.,10) 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில், மகா தீபம் ஏற்றப்பட்டது. அதிகாலை, 2:00 மணிக்கு, கோவில் நடை திறக்கப்பட்டு, விநாயகர், முருகர், அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அண்ணாமலையார் மூல கருவறையில், சிவாச்சாரியார்கள் வேதபாராயணம் ஓத, வேதமந்திரங்கள் முழங்க, நெய்த்திரியிட்ட விளக்கு ஏற்றப்பட்டது. பின், பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில், ஐந்து மடக்குகளில், தீபம் ஏற்றப்பட்டது. அதிகாலை, 4:00 மணிக்கு, பரணி தீபம் ஏற்றப்பட்டு, முதல் பிரகாரத்தில் வலம் வந்தபோது, பக்தர்கள் பரவசத்துடன், அண்ணாமலையாருக்கு அரோகரா என, கோஷம் எழுப்பி, வழிபட்டனர். கோவிலில் உள்ள, அனைத்து சன்னதிகளிலும் தீபம் ஏற்றப்பட்டது. சன்னதியில் ஏற்றப்பட்ட பரணி தீபத்தின், ஐந்து அகல் விளக்குகளையும், கொடி மரத்தின் முன்பாக உள்ள, அகண்டத்தில் ஒன்று சேர்த்தனர்; பின், ஐந்து தீப்பந்தங்கள் ஏற்றப்பட்டு, மலை உச்சியில் உள்ளவர்களுக்கு தெரியும் படி காண்பிக்கப்பட்டது.

 

Image result for திருவண்ணமலை

 

மாலை, 6:00 மணிக்கு, மலை மீது, மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்த தீபம், தொடர்ந்து, 10 நாட்கள் எரியும். இது, சுற்றுவட்டாரத்தில், 40 கி.மீ., தூரம் வரை தெரியும். கோவில் வளாகம் முழுவதும், வண்ண விளக்குகளாலும், பிரகாரம், தங்க கொடிமரம், தீப தரிசன மண்டபம் என, கோவில் முழுவதும், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் மஹா தீப தரிசனம் செய்தனர்.