கடந்த ஏப்ரல்,- மே மாதங்களில், நாடு முழுதும் 105 இடங்களில் நடந்த ஆர்.எஸ்.எஸ்., முகாம்களில், 21,566 பேர் பயிற்சி பெற்றுள்ளதாக, ஊட்டியில் நடந்த கூட்டத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் முழுநேர ஊழியர்கள் கூட்டம், கடந்த 10 முதல் 15-ம் தேதி வரை, நீலகிரி மாவட்டம், ஊட்டியில் நடந்தது. அதன் நிறைவில், கடந்த ஓராண்டில் ஆர்.எஸ்.எஸ்., செயல்பாடுகள் குறித்து விரிவான அறிக்கையை, பொதுச்செயலர் ஹொசபலே தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: நாடெங்கும் 63,724 ‘ஷாகா’ எனப்படும் தினசரி பயிற்சி வகுப்புகள்; 23,299 ‘மிலன்’ எனப்படும் வாராந்திர கூடுதல்கள்; 9548 ‘மண்டலி’ எனப்படும் மாதாந்திர கூடுதல்களும் நடந்து வருகின்றன. ஏழு நாட்கள் ஆரம்ப நிலை உட்பட நான்கு நிலைகளில், ஆண்டுதோறும் பயிற்சி முகாம்கள் நடக்கின்றன. கடந்த ஏப்ரல்,- மே மாதங்களில், 105 இடங்களில் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிற்சி முகாம்கள், 20 நாட்கள் நடந்தன. மூன்றாம் ஆண்டு பயிற்சி முகாம், ஆர்.எஸ்.எஸ்., தலைமையகம் அமைந்துள்ள நாக்பூரில் நடந்தது. இந்த முகாம்களில், 21,566 பேர் பங்கேற்றனர். இதில் 16,908 பேர், 40 வயதிற்கு உட்பட்டவர்கள்; 4,658 பேர் 40 முதல் 65 வயதிற்கு இடைப்பட்டவர்கள். 20 நாட்கள் விடுமுறை எடுத்து, 5,000 ரூபாய் செலவு செய்து, இந்த முகாம்களில், இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் கலந்து கொண்டிருப்பது, ஆர்.எஸ்.எஸ்., வளர்ச்சி பாதையில் செல்வதை காட்டுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சமூகங்களுக்கு இடையே மோதலை தவிர்த்து இணக்கத்தை ஏற்படுத்துதல், மதமாற்றத்தை தடுத்தல், கல்வி, மருத்துவம் உள்ளிட்டவற்றில் சேவை பணிகளை விரிவுபடுத்துதல் போன்ற பணிகளில், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.