ஆர்.எஸ்.எஸ் சாமான்யர்களையும், அசாதாரமானவர்களாக மாற்றுகிது. அந்தவகையில் சாதாரண குடும்பத்து நபர், சங்கத் தொடர்பின் மூலம் சமூகப் பணியும் செய்து, எளிய குடும்பத்தில் பிறந்த போதும், தனது குடும்பத்தை விட, சமுதாயப் பணியே முக்கியம் என வாழ்ந்து, சங்க கார்யகர்த்தர்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட்ட சுந்தரராஜன் ஜியைப் பற்றி இந்த இதழில் அறிவோம்…
கோவிந்த ராமானுஜம்- முத்துலட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு மகனாக, 1952 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 10 ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பில் பிறந்தார் சுந்தரராஜன் ஜி. தனது மூன்று வயதிலேயே தந்தையை இழந்ததால், தாயின் அரவணைப்பில் வளர்ந்தார்.
11ம் வகுப்பு வரை வத்திராயிருப்பில் உள்ள இந்து ஹையர் செகண்டரி ஸ்கூலில் படித்த பிறகு, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அரசு கல்லூரியில் ஆசிரியர் பயிற்சி பெற்றார். மாநில அளவில் வாலிபால் வீரரான சுந்தரராஜன் ஜி, 1972 ஆம் ஆண்டு, ஒரு வருடம் மட்டும் மண்வளம் பாதுகாப்பு திட்டத்தில், தற்காலிகப் பணியாளராக பணிபுரிந்தார்.
1973ல், தான் படித்த வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப் பள்ளியில், ஆசிரியராக பணியில் சேர்ந்தார். அங்கு வேலை செய்து கொண்டே, அஞ்சல்வழிக் கல்வி மூலம் பி.லிட், எம்.ஏ (தமிழ்), எம்.ஏ (வரலாறு), பி.எட், எம்.எட் பட்டப்படிப்பை படித்துத் தேர்ச்சிப் பெற்றார்.
1973 ஆம் ஆண்டு, அப்போது சங்கப் பிரச்சாரக்காக இருந்த இல. கணேசன் ஜி, ஸ்ரீ கணேசன் ஜிக்களின் ஏற்பாட்டில், ஒரு வீட்டின் மாடியில் சங்கத்தைப் பற்றிய அறிமுகக் கூட்டம் நடந்தது. அதில் தனது நண்பர்களான சந்திரசேகர பாண்டியன் ஜி மற்றும் ராஜலிங்கம் ஜியுடன் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு சுதந்திர கட்சியிலிருந்து வந்த நாராயண சாமி ஐயர், குமந்தாபுரம் பார்த்தசாரதி நாயக்கர் போன்றோர் தலைமை தாங்கினார். ராஜபாளையத்தில் நடந்த அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், சங்கத்தைப் பற்றி தெரிந்து கொண்டு, சங்கத்தில் இணைந்து சங்கப்பணி செய்ய ஆர்வம் காட்டினார். அதனைத் தொடர்ந்து, வத்திராயிருப்பு தாலுகா காரியவாஹ்காக 1973 முதல் சங்கப் பணியில் ஈடுபட்டார், சுந்தரராஜன் ஜி. சந்திரசேகர பாண்டியன் ஜி கான்சாபுரம் பகுதிக்கும், ராஜலிங்கம் ஜி புதுப்பட்டி பகுதிக்கும் சங்கப் பொறுப்பேற்று, தங்களது சங்கப்பணியை தொடர்ந்தனர். காலப்போக்கில் சந்திரசேகர பாண்டியன் ஜி, பாஸ்கர் ராவ் ஜியின் வழிகாட்டுதலில் சங்கப் பிரச்சாரக்கானார்.
சுந்தரராஜன் ஜியின் வீடு, சங்க காரியாலயம் (அலுவலகம்) போல இருந்தது. ஜியின் தாயார் முத்துலட்சுமி அம்மாள், 92 வயது வரை வாழ்ந்து, வீட்டிற்கு வரும் சங்க காரியகர்த்தர்களுக்கு நல்ல முறையில் வரவேற்பளித்து உபசரிப்பார். அந்தப் பகுதியில் சங்க பைட்டக் (அமர்வு) மற்றும் சங்கத்தின் சகோதர நிகழ்வுகள் எதுவாக இருந்தாலும், ஜியின் வீட்டிலேயே நடைபெறும். தன்னுடைய ஆசிரியர் பணி மற்றும் சங்கப்பணி என இரு வேலைகளையும் திறம்பட செய்து, அவர் சுற்றியுள்ள எல்லாப் பகுதியிலும் சங்கம் வளர அரும்பாடுபட்டார்.
சுந்தரராஜன் ஜி நடத்திய வத்திராயிருப்பு ஷாகாவின் மூலமாக சங்கத்திற்கு அறிமுகமான ஹரிஹர சுப்பிரமணியன் ஜி, பிற்காலத்தில் சங்கத்தின் முழுநேர ஊழியராக இருந்தார். தனது இறுதிகாலத்தில் பி.எம்.எஸ்.ஸின் முழுநேர ஊழியராக பணியாற்றினார்..
சுந்தரராஜன் ஜியின் வீட்டிற்கு சங்கத்தின் மூத்த அதிகாரிகள் பாஸ்கர் ராவ் ஜி, இராம கோபாலன் ஜி, சுப்பராவ் ஜி, இல. கணேசன் ஜி, ஸ்ரீ கணேசன் ஜி, ஸ்தாணுமாலயன் ஜி, வேலாயுதம் ஜி, கேசவ விநாயகம் ஜி, முருகானந்தம் ஜி என பல பிராந்த, ஷேத்ர, அகில பாரத அதிகாரிகள் வந்து, தங்கி உணவருந்தி உள்ளனர்.
அந்த காலத்தில் சைக்கிள் கூட இல்லாத நிலையிலும், இல. கணேசன் ஜியுடன் சேர்ந்து நடந்தே சென்று பிரவாஸ் (சுற்றுப்பயணம்) செய்தது, தனது வாழ்நாளில் கிடைத்த பெரும் பாக்கியம் என நம்மிடம் தெரிவித்தார், சுந்தரராஜன் ஜி. தினமும் 5 கிலோ மீட்டர் அளவில் சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு நடந்து சென்று, அங்குள்ள மக்களைச் சந்தித்து, சங்க வேலை செய்ததன் மூலம், அந்த சுற்றுவட்டாரத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டதாக, நம்மிடம் தெரிவித்தார் சுந்தரராஜன் ஜி.
மீனாட்சிபுரத்தில் நடந்த மதமாற்றம் சம்பவத்தின் போது, அங்கேயே பல நாட்கள் தங்கி, ஊரில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று, மக்களின் மனதில் உள்ள குறைகளை கேட்டறிந்து, சமுதாய மாற்றத்தையும், மதமாற்றம் நிகழ்வைத் தடுப்பதிலும் நிறைய வேலைகள் செய்தார். விவேகானந்தர் நூற்றாண்டு விழா, 1992 ஆம் ஆண்டு அயோத்தியில் ஸ்ரீராமர் ஆலயம் கட்ட, ஊரிலிருந்து செங்கலை வாங்கி அயோத்திக்கு அனுப்பி வைத்தது என தனது சமுதாயப் பணியை தொடர்ந்து செய்த சுந்தரராஜன் ஜி, இரண்டாம் ஆண்டு சங்கப் பயிற்சி முகாமை முடித்துள்ளார்.
1975 ஆம் ஆண்டு, பாகம்பிரியாள் அம்மாளை திருமணம் செய்த சுந்தரராஜன் ஜிக்கு, விஜயலட்சுமி, புவனேஸ்வரி, காயத்ரி என்ற மூன்று மகள்களும், சங்கர நாராயணன் என்ற ஒரு மகனும் உள்ளனர். தான் படித்த பள்ளிக்கூடத்திலேயே ஆசிரியர் பணி செய்த சுந்தரராஜன் ஜி, தனது மகனும் அதே பள்ளிக்கூடத்தில் வேலை செய்வது மகிழ்ச்சியாக உள்ளது என கூறினார். தற்போது அவரது மகன் சங்கத்தின் சகோதர அமைப்பான “பாரதிய சிக்ஷண மண்டல்” பொறுப்பில் உள்ளார்.
மிக இளம் வயதிலேயே தந்தையை இழந்தாலும், தளராது பாடுபட்டு, கடுமையாக உழைத்து ஆசிரியர் பணி செய்து, சமுதாயத்தின் மீது அக்கறை கொண்டு சங்கப் பணி செய்த சுந்தரராஜன் ஜி, நம் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமான ஸ்வயம்சேவக்காக திகழ்கிறார்.