தேவையா நவீன காலத்தில் திருவிழாக்கள் !!!???

இக்காலத்தில் திருவிழாக்கள் தேவையா, இவ்வளவு பொருள் செலவு செய்யப்பட வேண்டுமா, எளிமையாக கொண்டாடினால் போதுமே, இவ்வளவு சத்தம் அமர்க்களம் ஆர்பாட்டம் தேவையா, பட்டாசு வெடிக்க வேண்டுமா, வேகமான காலகட்டத்தில் இவ்வளவு நேரம் இதில் செலவிடப்பட வேண்டுமா, போட்டி யுகத்தில் பழமை தேவையா என அடுக்கடுக்காய் நம் ஹிந்துக்களின் ஆழமான கலாசாரத்தையும் பண்பாட்டையும் சரியாக அறியாத இக்காலத்தின் படித்த மேதாவிகளாய் தன்னை நினைத்து வளரும் புதிய தலைமுறையினர் சிலர் கேட்டு வருகின்றனர், இதில் அவர்கள் தவறு ஏதும் இல்லை. மெக்காலே கல்வி முறை, மேற்கத்திய நாகரீக மோகம், தரம் தாழ்ந்த ஊடக செயல்பாடுகள் மற்றும் ஹிந்து கலாசாரத்தை சீர்குலைக்க அல்லும் பகலும் அயராது பாடுபடும் சில அமைப்புகளின் விஷமதனமான பிராச்சாரங்களின் விளைவாக தோன்றியுள்ள இந்த போக்கு மிகவும் அபாயகரமானதாகும்.

பிள்ளைகளுக்கு நம் கலாசாரத்தின் ஆழத்தையும் பண்பாட்டின் முக்கியதுவத்தையும், அவைகளில் பொதிந்துள்ள அறிவியல்பூர்வமான உண்மைகளையும் அதனை கடைபிடிப்பதால் வரும் நன்மைகளையும் விளக்கி புரிய வைக்க வேண்டியது வீட்டில் உள்ள பெரியவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் தலையாய கடமையாகும்.

மறந்துவிடும் நாட்களா நம் விழாக்கள்:

மேற்கத்திய கலாசாரத்தை போல மதர்ஸ் டே, பாதர்ஸ் டே, காதலர் தினம் என நாம் கொண்டாடுகிறோமா என்றால் ஆம் சிலவற்றை சில வகைகளில் நாமும் கொண்டாடுகிறோம். உதாரணமாக கல்வியின் முக்கியதுவத்தை விளக்கும் சரஸ்வதி பூஜை அதே நாளில் ஆயுதங்களுக்கு ஆயுத பூஜை, செல்வத்தை வளர்க்க லக்ஷ்மி பூஜை, வீரத்திற்க்கு விஜயதசமி, அறுவடைக்கென பொங்கல், நமக்கு உழைக்கும் மாடுகளுக்கு என மாட்டுப்பொங்கல் என சொல்லிக்கொண்டே போகலாம் ஆனால் உற்று கவனித்தால் அவர்களுக்கும் நமக்கும் ஒரு சில வித்தியாசங்கள் கண்டிப்பாக இருக்கத்தான் செய்கிறது, அதுதான் நமது பாரம்பரியத்தின் பெருமையும்கூட. அதாவது என்றும் நாம் வணங்கும் தாய் தந்தையருக்கென தனியாக ஒருநாள் மட்டும் வைத்து கொண்டாடிவிட்டு அவர்களை மறந்துவிடுவதில்லை, என்றும் காதலுடன் இணைபிரியாமல் இருக்கும் தம்பதியருக்கு ஒவ்வொரு தினமும் காதலர் தினம்தானே, இப்படி உறவுகளை ஒரே ஒரு தினத்தில் மட்டும் நினைவு கூர்ந்து மறப்பதல்ல நம் கலாசாரம். நாம் கொண்டாடும் அனைத்தும் ஏதோ நாட்குறிப்பில் பதிவு செய்து வைத்துகொண்டு கடமைக்காக அன்று மட்டும் வாழ்த்து சொல்லி ஓடிவிடுவதல்ல, நாம் அப்படி பழக்கப்பட்டவர்களும் அல்ல.

விழா என்றாலே பிரம்மாண்டம்தானே:

நம் இந்துக்களின் பாரம்பரியத்தில் நாம் எதையும் சிறியதாக செய்து பழக்கமே இல்லை, நமக்கு அனைத்துமே பிரம்மாண்டம்தான், நாம் கடைபிடிக்கும் நாட்கள் அனைத்தும் நமக்கு விழாக்கள்தான், அதுவும் புத்தாடை ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் வேடிக்கை விளையாட்டு கேளிக்கை என சந்தோஷம் பொங்கிவழியும் திருவிழாக்கள்தான்.

நமக்கு கிருஷ்ணர் பிறந்ததும் திருவிழாதான் அவர் நரகாசுரனை அழித்த தீபாவளியும் திருவிழாதான், தியாகராஜ ஆராதனையும் திருவிழாதான் தீக்குண்டம் இறங்குவதும் திருவிழாதான், பொங்கல் வைப்பதும் திருவிழாதான், கள்ளழகர் ஆற்றில் இறங்குவதும் திருவிழாதான், இவ்வளவு ஏன் பழையவனவற்றை கழிக்கும் போகியும், பெரியவர்களை கண்டு ஆசீர்வாதம் வாங்கும் காணும்பொங்கலும்கூட நமக்கு திருவிழாக்கள்தான் இப்படி அனைத்தையுமே மகிழ்வூட்டும் திருவிழாக்களாகத்தானே கொண்டாடி பழக்கம் நமக்கு!!!.

ஆரோக்கியம் பேண ஆரோக்கிய திருவிழா:

ரிஷிகளும் முனிவர்களும் ஞானிகளுமாகிய அறிவில் சிறந்த நம் முன்னோர்கள் வகுத்த வழியில் இப்படி அனைத்தையுமே நாம் பெரிய திருவிழாக்களாக கொண்டாடுவதில் ஆழமான அர்த்தங்கள் இல்லாமல் இல்லை, “சந்தியில் வந்தனம்செய்” எனும் ஒரு பழமொழி உண்டு ஒரு நாளில் பகல் பொழுதில் நமக்கு நான்கு சந்திப்பொழுதுகள் உள்ளன ஆனால் பொதுவாக நம் அனைவருக்கும் தெரிந்ததும் கடைபிடிப்பதும் காலை மாலை சந்திப்பொழுதுகள் மட்டுமே பொதுவாகவே சந்தியா காலங்களில் லேசாக தளர்வு நிலையில் இருக்கும் நமது மனமும் உடலும் எதையும் எளிதாக கிரகித்துவிடும் தன்மையுடன் இருக்கும். அது நல்லதோ கெட்டதோ, ஆரோக்கியமோ நோயோ எதுவாக இருந்தாலும் சரி எளிதில் நம்மில் ஒன்றாக இணைந்துவிடும். எனவேதான் அதை அறிவியல்பூர்வமாக ஆராய்ந்த நம் முன்னோர்கள் அந்த பொழுதுகளில் உணவு உண்ணக்கூடாது, தூங்கக்கூடாது, விளக்கேற்றி இறைவனை வணங்க வேண்டும், குழந்தைகள் காலையில் படிக்கவும் மாலையில் விளையாடவும் வேண்டும் என சொல்லிவைத்தார்கள்.

“அண்டத்தில் உள்ளதே பிண்டம் பிண்டத்தில் உள்ளதே அண்டம்” என்பதை போல ஒரு நாளில் வரும் இந்த மாற்றங்கள் ஓவ்வோர் ஆண்டிலும்கூட வருகின்றன. இயற்கையின் சுழற்சியில் தோராயமாக ஓர் ஆண்டில் இரண்டரை முதல் மூன்று மாதத்திற்கு ஒரு சந்திப்பொழுது வருகின்றது அதாவது வெய்யிற்காலமும் மழைகாலமும் கூடும் நேரம், மழைகாலமும் குளிர் காலமும் சந்திக்கும் நேரம் என சில சந்திப்பொழுதுகள் வருகின்றன. அந்த காலங்களில் நமக்கு நோய்களின் தாக்கம் அதிகமாகலாம், மனசஞ்சலம் உண்டாகலாம் எனவே அதை தடுக்க சில விரதங்களும் அக்காலகட்ட நோய்களுக்கேற்ப நோய் எதிர்ப்பு உணவு வகைகளை எடுத்துக்கொண்டு நம்மை ஆரோக்கியமாக்க விழாக்களும் உடலையும் மனதையும் உரமாக்க விளையாட்டுகளும் ஏற்படுத்தப்பட்டன. அந்த காலகட்டத்தில் இறைவனை வணங்கும்போது அல்லும் பகலும் நமக்கு துணைபுரியும் இறைவனின் அருளும் ஆற்றலும் நமக்கு அதிகமாக கிடைத்து நம் வாழ்வில் உறுதுணையாகவும், வளம் கூட்டுவதாகவும் அமைகிறது.

மனித மனம் ஒரே செயலை தினமும் திரும்ப திரும்ப செய்தால் ஒரு காலகட்டத்தில் அது சலித்து அந்த செயலை வெறுக்க ஆரம்பிக்கிறது எனவே மனதிற்கு சரியான காலகட்டத்தில் ஓய்வு தேவைபடுகிறது, மனித மனத்தை பொருத்தவரை ஓய்வு என்பது எவ்வித எண்ணங்களும் இல்லாமல் இருப்பதல்ல. வேறு புதிய எண்ணங்களும் செயல்களும் மட்டுமே அதற்க்கு ஓய்வு. ஒரு நாளில்கூட நம் மனம் 45 நிமிடங்களுக்கு மேல் ஒரு விஷயத்தில் நிலைப்பதில்லை என்பது மனநல வல்லுனர்களின் கருத்து, இதை ஒட்டிதான் நமக்கு பள்ளிகளில் பாடதிட்ட கால அட்டவணை 40 முதல் 45 நிமிடங்களுக்கு ஒன்றாக அமைக்கப்பட்டிருக்கிறது. பரிட்சைகளும் காலாண்டு அரையாண்டு முழு ஆண்டு என குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அமைக்கப்பட்டுள்ளது. இதை முன்னரே அறிந்திருந்த நம் முன்னோர்கள் மனிதனின் மனம் நன்றாக செயல்படவும் ஆரோக்கியமாக இருக்கவும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் வரும் இந்த திருவிழாக்களை சரியாக பயன்படுத்தி மக்களின் மனதை செம்மையாக்க வழி கண்டனர்.

இயந்திரமயமாகிப்போன இக்காலகட்டத்தில், தனிகுடித்தனம், அப்பார்ட்மெண்ட் வாழ்க்கை என உறவுகளில் இருந்து விலகி கூட்டில் அடைபட்ட மனிதனின் வாழ்க்கையில் கணினி, அலைபேசி செயலி, கேட்ஜெட்களால் மனமும் மேலும் சுருங்கி உறவுகளுடனும் அக்கம்பக்கத்தினருடனும்கூட மனம் விட்டு பேசமுடியாத நிலையில் பெரியவர்கள் மட்டும் அல்ல குழந்தைகளும் தள்ளப்படுவதால் அவர்கள் பல்வேறு உடல் நோய்களுக்கும், மனநோய்களுக்கும் எளிதாக ஆளாகின்றனர். இதற்கு தற்காலத்தில் பெருகிவிட்ட குற்ற சம்பவங்களும், மூலைமுடுக்கெங்கும் பெருகிவிட்ட பொது மற்றும் மனநல மருத்துவமனைகளும், முதியோர் இல்லங்களுமே சாட்சி. இந்த சூழ்நிலைகளை மாற்றி அனைவரும் நல்ல உடல்நலத்துடனும் மனநலத்துடனும் வாழ முன்னெப்போதையும் விட இன்றைய காலகட்டத்திற்குதான் திருவிழாக்கள் அதிகமாக தேவைபடுகிறது என்பதுதான் நிதர்சன உண்மை.

உறவுகள் மேம்பட உன்னத திருவிழா:

இது போன்ற திருவிழா காலங்களில் வேலை, வியாபாரம் போன்ற பல காரணங்களுக்காக எங்கெங்கோ சென்று வாழ்ந்து வரும் நமது சொந்தபந்தங்கள் எல்லாம் ஒன்றுகூடிட, சொந்தங்களை புதுப்பிக்க, புதிய சொந்தங்கள் உருவாக என திருவிழாக்கள் நம் வாழ்வில் முக்கிய பங்காற்றுகின்றன என்றால் அது மிகைஇல்லை. தற்காலத்தில் நகரத்து சூழலில் வளரும் குழந்தைகளுக்கு தங்கள் குடும்பத்தினரை தவிர அனைத்து பெரியவர்களுமே அங்கிள் ஆன்டி’தான் அவர்களுக்கு அடிப்படை உறவுமுறைகளாகிய சித்தப்பா, சித்தி, அத்தை, மாமா, மச்சான், மச்சினிச்சி, அப்பத்தா, அம்மாச்சி, அய்யா, தாத்தா, அத்தான், அத்தாச்சி, மதினி, அண்ணி, ஒன்று விட்ட சொந்தங்கள் என யாரையும் முறை சொல்லி அழைக்க தெரிவதில்லை.

குடும்ப உறவுகளும் அதன் மேன்மையும் புரிவதில்லை. கூட்டு குடும்பம் தெரிவதில்லை. கூட்டு குடும்பத்தில் இருக்கும் வசதிகள், உரிமையாக கோபித்துக்கொள்ளும் சுகங்கள், விட்டுக்கொடுத்தலின் பெருமை, அரவணைப்பின் அருமை என எதுவும் தெரிவதில்லை. கூட்டுகுடும்பமாக வாழ்ந்த காலத்தில் பெரிய அளவிலான உடல் நோய்களோ மன நோய்களோ பொருளாதார சிக்கல்களோ சமுதாய குற்றங்களோ அதிகம் இல்லை அதை அழகிய கட்டமைப்புடன் கூடிய நம் குடும்ப சூழ்நிலைகளே சரிசெய்துவிடும். இப்படி நாம் மறந்துபோன பல நல்ல விஷயங்கள் உள்ளடக்கிய கூட்டு குடும்பமுறை மறைந்து சொந்தபந்தங்கள் விலகி வாழும் காலகட்டத்தில் இருக்கும் நாம் அனைவரும் ஒன்றாக சேர, சந்தோஷமாக சில நாட்களாவது ஒன்றாய் கழிக்க இன்றளவும் உதவி புரிவது திருவிழாக்கள்தான் எனவே அத்தகைய திருவிழாக்கள் தற்போதுதான் நமக்கு அதிகம் தேவை.

பொருளாதாரம் பெருக குபேர திருவிழா:

நமது தேசத்தின் பொருளாதார ஏற்றதாழ்வுகளையும் சமன்செய்யவும் இந்த விழாக்களை பயன்பட்டன. அரசர்கள், பெரிய தனவந்தர்கள் போன்ற நல்ல பொருளாதார நிலையை உடையவர்களிடம் பணம் சேர்ந்துகொண்டே சென்றால் அது நாட்டின் பொருளாதார வீக்கத்தை அதிகப்படுத்தி நாட்டின் அமைதியையும், ஸ்திரதண்மையையும் நிலைகுலைத்துவிடும் எனவே இதுபோன்ற திருவிழா காலங்களில் அவர்களிடம் உள்ள செல்வம் வீட்டிற்க்கு வர்ணம் பூசுதலில் ஆரம்பித்து புதிய துணிமணிகள் வாங்குவது, நகைகள், பாத்திரங்கள் வாங்குவது, பலகாரங்கள் செய்வது, தானம் வழங்குவது, பொழுதுபோக்குகள், சுற்றுலா, போக்குவரத்து, விருந்தோம்பல், விளையாட்டு ஏற்பாடுகள், சுற்றங்களுக்கு உதவுதல் போன்ற எண்ணற்ற வழிகளில் செலவழிக்கப்படுவதால் அவற்றை நம்பியுள்ள விவசாயிகள், வியாபாரிகள், அவர்களிடம் வேலை செய்வோர், நெசவாளிகள், நகை செய்யும் தொழிளாளிகள், பண்டபாத்திரங்கள் செய்வோர், தொழிளாளிகள் என பலதரப்பட்டோருக்கு இந்த பணம் பகிர்ந்தளிக்கப்பட்டு பொருளாதாரம் சீராகிறது, கடைகோடியில் உள்ள மக்களின் வாழ்க்கை தரமும் மேம்படுகிறது எனவே பொருளாதாரத்தில் நாம் தன்னிறைவு பெற்றிட திருவிழாக்கள் கண்டிப்பாக நமக்கு தேவை.

எனினும் இக்காலத்தில் நாம் என்ன செய்கிறோம் தேவையானவற்றை நம் வீட்டின்அருகில் உள்ள நமக்கு தெரிந்த கடைகளில் வாங்கி அவர்களின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தி ஒன்றிணைந்த சமுதாய வளர்ச்சியை பற்றி யோசிக்காமல் புதுமை என்ற பெயரில் தொலைபேசியிலேயே பெரும் பணக்காரர்கள் நடத்தும் ஆன்லைன் கடைகளில் பொருட்களை வாங்கி அவர்களை மேலும் பணக்காரர்கள் ஆக்குகிறோம் இதனால் நம் சமுதாயத்தில் நம் கண்ணுக்கு தெரியாமல் நம்மால் மெல்ல ஏற்படுத்தப்படும் பொருளாதார ஏற்றதாழ்வுகள் வளர்ந்து பின்னாளில் நமக்கே பெரிய தீங்கிழைக்கும் என்பதை நாம் இன்னமும் உணரவில்லை. எனவே இனி வரும் திருவிழா காலங்களிளாவது நமக்கு தேவையானவற்றை அருகில் உள்ள கடைகளில் வாங்கும் பழக்கத்தை ஏற்படுத்தி நம் முன்னோர்கள் உருவாக்கி வைத்த நல்ல பழக்கவழக்கங்களை பின்பற்றுவோம்.

சமுதாயம் வாழ சனாதன திருவிழா:

உடல் மனம் பொருள் சமுதாயம் போன்ற அனைத்து விதங்களிலும் அடையும் முன்னேற்றமே உண்மையான முன்னேற்றம் அதுவே ஆரோக்கியமான சமுதாயம் உருவாக ஒரே வழி. “ஆரோக்கியமான மனிதன், ஆரோக்கியமான குடும்பம், ஆரோக்கியமான ஊர், ஆரோக்கியமான தேசம்” என்ற மாபெரும் தத்துவத்தை உள்ளடக்கிய நம் திருவிழாக்கள் என்பது ஒரே கல்லில் பல மாங்காய்களை அடிக்கும் வித்தை தெரிந்த நம் முன்னோர்களால் அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து உருவாக்கப்பட்ட ஒன்று.  மனித இனத்தின் உடல்நலம், மனநலம், பொருளாதாரம், உறவுகள், சேவை, சமுதாயம் மற்றும் தேசத்தின் ஒற்றுமை, முன்னேற்றம் போன்ற அனைத்தையும் ஒருங்கிணைத்து வளர்க்கும் அற்புத சக்தி கொண்ட திருவிழாக்களை நாமும் நம் உறவுகளுடனும் அக்கம்பக்கத்தினருடனும் இணைந்து கொண்டாடி மகிழ்வோம். வாட்சப்பிலும் முகநூலிலும் மட்டுமே வாழ்த்தாமல் குடும்பத்துடன் நேரில் சந்தித்து பரஸ்பரம் அன்பை வெளிப்படுத்துவோம். ஒன்றிணைந்து தேசத்தை முன்னேற்றுவோம்.

மற்றவர்களைபோல ஒரு சில புத்தகத்தில் அடைத்துவிட முடியாத மாபெரும் பொக்கிஷமாகிய நம் ஹிந்து தர்மத்தில் நம் முன்னோர்கள் நம்முடைய இகவாழ்க்கைக்கும் புறவாழ்க்கைக்கும் தேவையான அறிவியல், ஆரோக்கியம், ஒழுக்கம், பண்பு, கலாசாரம், சேவை போன்ற அனைத்தையும் அள்ள அள்ள குறையாத இறைஉணர்வுடன் கூடிய ஆன்மீகம் எனும் அமுதத்தில் குழைத்து கொடுத்துள்ளனர், இதை எவ்வளவு வேண்டுமோ அவ்வளவையும் நாம் பருகலாம், பிறருக்கும் தந்துதவலாம், ஏன் உலகம் முழுவதுக்கும் தற்போதைய தேவையான அமைதியை வாழங்க தகுந்த ஒரே வழியான இந்த அருமருந்தை தந்து உலகின் குருவாக பாரதத்தை உயர்த்தலாம்.

ஜே எஸ் சரவணகுமார்ஆரோக்கியபாரதிமாநில செயளாளர்வடதமிழ்நாடு

One thought on “தேவையா நவீன காலத்தில் திருவிழாக்கள் !!!???

Comments are closed.