தேச விரோத சக்திகளின் கைப்பாவை, காக்ரோச் ஜனதா கட்சி

அரசியலில் அவ்வப்போது சில கட்சிகள் முதன்மை பெறுவது அசாதாரணமானதல்ல. ஆனால் அதே நேரத்தில், ஒவ்வொரு கட்சியும் வெளிப்படையாக எதைச் சொல்கிறது, மறைமுகமாக எத்தகைய செயல் திட்டத்தை வைத்துள்ளது போன்றவற்றையெல்லாம் மக்கள் உன்னிப்பாக கவனித்து எடை போட வேண்டியது அவசியம். ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும், கட்சி தொடங்கலாம். இதை உரிமையாக எடுத்துக் கொண்டு துஷ்பிரயோகம் செய்வது ஜனநாயகத்தை நீர்த்துப் போக வைத்து விடும்.
கடந்த சில மாதங்களாக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை `காக்ரோச் ஜனதா கட்சி’யே பேசு பொருளாக உள்ளது. இந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் பின்னணியை உற்று நோக்கினால், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்துக்கு வருகின்றன. ஜூன் மாதம் 6ம் தேதி, டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சியினர் பெரும் திரளாக குவிந்தனர். இது இளைஞர்களின் தன்னெழுச்சி என்று ஒரு தரப்பினரால் விமர்சிக்கப்பட்டது. ஆனால் இதில் உண்மையை விட, பொய்யே மேலோங்கி உள்ளது.
காக்ரோச் ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் செளரப் தாஸ் கடந்த காலத்திலும் சரி, நிகழ்காலத்திலும் சரி நக்சல்களுக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்துள்ளார். ஹிட்மா பலியானால் என்ன? ஒவ்வொரு வீட்டிலும் ஹிட்மா உருவாகும் காலம் தொலைவில் இல்லை என்றெல்லாம் செளரப் தாஸ் கூறியுள்ளார். இடதுசாரி பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா மறைவுக்கு உருக்கமான அஞ்சலி செலுத்தியுள்ளார் செளரப் தாஸ்.
மாவோயிஸ்டுகளின் மறுபதிப்பாகவே காக்ரோச் ஜனதா கட்சியை பார்க்க வேண்டியிருக்கிறது. டெல்லி போராட்டத்தின் போது, யாரெல்லாம் முன்னணியில் இருந்தார்களோ அவர்களுக்கு இன்றளவும் காக்ரோச் ஜனதா கட்சி வக்காலத்து வாங்கி வருகிறது.
எழுத்தாளர் அருந்ததி ராய் எப்படிப்பட்டவர் என்பது நமக்கெல்லாம் நன்கு தெரியும். அவருக்கு நாட்டுப் பற்றில் நாட்டம் கிடையாது. இத்தகைய நபர்களை காக்ரோச் ஜனதா கட்சி தூக்கிப் பிடிக்கிறது.
மற்றொரு செய்தித் தொடர்பாளரான விஜிதா தஹியா மீதும் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. அவர் சமூக ஊடகத்தில் நெடுங்காலம் தொடர்பு வைத்துள்ளார். பிரபல யூடியூபர் துருவ் ரத்திக்கு அனுசரணையாக செயல்பட்டுள்ளார். உள்ளீடுகளை தயாரிக்க உதவியுள்ளார். விஜிதா தஹியா சனாதன தர்மத்தின் மீது தொடர்ந்து வெறுப்பை கக்கி வருகிறார். கோடிக்கணக்கான பக்தர்கள் ராமபிரானை போற்றி வணங்குகின்றனர். ராம பக்தி பாரதத்துக்கு அப்பாலும் பரவியுள்ளது. ராமபிரானை கேவலப்படுத்தும் வகையில் அவர் அசைவம் சாப்பிட்டார் என்று விஜிதா தஹியா பதிவிட்டுள்ளார். இதற்கு வலுவான ஆதாரங்களையும் அவர் காட்டவில்லை. காட்டவும் முடியாது என்பதுதான் உண்மை. எனினும், முடிந்த அளவு சேதத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே, இந்த தேச விரோத நபர்களின் இலக்கு.
காக்ரோச் ஜனதா கட்சியை நடிகர் பிரகாஷ் ராஜ், பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், சமூக செயல்பாட்டாளர் சோனம் வாங்சுக், காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகிக்கும் மாணவர் தலைவர்கள் சிலர் தீவிரமாக ஆதரிக்கின்றனர். உண்மையான இளைஞர் இயக்கம் எழுச்சியுற்று விட்டது என்று பிரசாந்த் பூஷன் சமூக ஊடகத்தில் பதிவிட்டது வரம்பு கடந்த செயலாகவே பார்க்கப்படுகிறது. காக்ரோச் ஜனதா கட்சி அரசியல் சார்பற்றது, பாரபட்சமற்றது என்று கூறப்பட்டாலும், அது ஆம் ஆத்மி பக்கம் சாய்ந்துள்ளது என அரசியல் நோக்கர்கள் பலர் சுட்டிக் காட்டியுள்ளனர்.
சர்தேச ஊடகங்கள் காக்ரோச் ஜனதா கட்சிக்கு முழு வீச்சில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். துருக்கியின் அரசு ஊடகமான டி.ஆர்.டி. உலகம் இந்த இயக்கத்தை தொடர்ந்து ஆதரித்து வருகிறது. இந்த டி.ஆர்.டி. உலகம், ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானை ஆதரித்தது என்பதை ஒருபோதும் மறந்து விட முடியாது.
காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே, இது தன்னெழுச்சியான நடவடிக்கை. இதில் வேறு சக்திகளின் தலையீடு எதுவும் இல்லை. இந்த காக்ரோச் ஜனதா கட்சி தொடர்ந்து பணியாற்றும், மேலும் முக்கியத்துவம் பெறும், இதை எளிதில் நசுக்கி விட முடியாது என்று தெரிவித்துள்ளார்.
காக்ரோச் ஜனதா கட்சி சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகிறது. ஆனால் இது மேம்போக்கானது. இதற்கு அடிப்படை ரீதியிலான ஆதரவு எதுவும் கிடையாது. ஆணிவேர் வலுவாக இருந்தால் தான், மரம் வலுவாக இருக்க முடியும். இதைப்போல ஒரு கட்சி வலுவாக இருக்க வேண்டுமானால், தொண்டர்களின் கட்டமைப்பு நேர்த்தியாக இருக்க வேண்டும். தொண்டர்கள் இல்லாத கட்சி, எப்போது வேண்டுமானாலும் ஆணிவேரற்ற மரமாக சாய்ந்து விடும் என்பதை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.

கட்டுரையாளர் : ஆய்வாளர்
ஆர்கனைசர் ஆங்கில இணையத்திலிருந்து
தமிழில் : அடவி வணங்கி