இஸ்ரேலில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சிலை

பிரதமர் நரேந்திர மோடியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இஸ்ரேல் பயணத்தை அடுத்து 2 நாடுகளும் மக்களுக்கிடையே உள்ள தொடர்பை வலுப்படுத்த முடிவு செய்துள்ளன. இதன் ஒரு கட்டமாக மும்பையில் உள்ள இஸ்ரேல் தூதரகம், இஸ்ரேலில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சிலையை அமைக்க முன் வந்துள்ளது.
மகாராஷ்ட்ர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸை, மும்பையில் உள்ள இஸ்ரேல் தூதர் யானிவ் ரேவச் சந்தித்துப் பேசினார். `முக்கிய விசயங்களை பரிமாறிக் கொண்டோம். சத்ரபதி சிவாஜி மகாராஜின் புகழ் பாரதத்துக்கு அப்பாலும் பரவ வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தேவையான எல்லா உதவிகளையும் செய்வதாக உறுதியளித்துள்ளார். ஆசி வழங்கியுள்ளார்’ என்று யானிவ் ரேவச் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வின்போது, சர்வதேச ஆய்வாளர் அனயிஜோக்லேகரும் கலந்து கொண்டார். இந்த சிலை பிரம்மாண்டமாக அமைக்கப்படும். இஸ்ரேலில் உள்ள ஒரு முக்கிய நகரில் நிறுவப்படும் தலைசிறந்த வல்லுநர்கள் இந்த சிலையை வடிவமைப்பார்கள். இது சிவாஜி மகாராஜின் பராக்கிரமத்தை பறைசாற்றும் வகையில் இருக்கும் என்று அனயிஜோக்லேகர் தெரிவித்துள்ளார்.
சிவாஜி மகாராஜை மராட்டிய பேரரசை நிறுவியவர் என்று மட்டும் பார்க்கக்கூடாது. அவரது ஆளுமை அபாரமானது. ஆட்சித் திறன் வியக்க வைக்கக்கூடியது. அவரது சீர்திருத்தங்கள் இப்போதும் பொருந்தக்கூடிய வகையில் உள்ளன என்று யானிவ் ரேவச் தெரிவித்துள்ளார்.
சிவாஜி மகாராஜின் புத்தகத்தை ஹீப்ரு மொழியில் மொழியாக்கம் செய்ய வேண்டும். இதன்மூலம் இஸ்ரேலிய மக்கள் பயனடைவார்கள். உலகம் முழுவதும் உள்ள இஸ்ரேலியர்கள் சிவாஜி மகாராஜின் கீர்த்தியை பரப்பிக் கொண்டே இருப்பார்கள்.
`சிலை என்பது ஒரு குறியீடாகும். நமது மதிப்புக்கும், மரியாதைக்கும் உரியவர்களுக்கு சிலை எடுத்து கெளரவிக்கிறோம். மகாராஷ்ட்ராவில் சிவாஜி மகாராஜுக்கு எந்த அளவு மரியாதை உள்ளதோ, அதற்கு சமமான மரியாதையை இஸ்ரேலிலும் உருவாக்குவோம். மகாராஷ்ட்ர மக்களுக்கும், யூத மக்களுக்கும் இடையிலான உறவு காலங்காலமாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இது எதிர்காலத்தில் மேலும் வலுவடைய வேண்டும் என்று விரும்புகிறோம். இதன் ஓர் அம்சமாகவே இஸ்ரேலில் உள்ள ஒரு முக்கிய நகரில் சிவாஜி மகாராஜின் பிரம்மாண்ட உருவச் சிலையை நிறுவ முடிவு செய்துள்ளோம். இந்த சிலை திறப்பு விழாவில், இரு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்வார்கள். இந்த விழா உலகின் கவனத்தை ஈர்க்கும்’ என்று யானிவ் ரோவச் தெரிவித்துள்ளார்.

கட்டுரையாளர் : செய்தியாளர்
ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து தமிழில் : நிகரியவாதி