தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியிட கெடு நீட்டிப்பு

அசாம் மாநிலத்தில், தேசிய குடிமக்கள் பதிவேட்டை வெளியிடுவதற்கான காலக் கெடுவை, அடுத்த மாதம், 31 வரை நீட்டித்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வட கிழக்கு மாநிலமான, அசாமில், முதல்வர் சர்பானந்தா சோனவால் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, அண்டை நாடான வங்கதேசத்தை சேர்ந்தவர்கள், சட்டவிரோதமாக ஊடுருவி, பல ஆண்டுகளாக வசித்து வருவதாக புகார் எழுந்தது.இவர்களை அடையாளம் காணும் வகையில், தேசிய குடிமக்கள் பதிவேட்டை, மத்திய, மாநில அரசுகள் தயாரித்து வருகின்றன. கடந்தாண்டு, இதுகுறித்த வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், 40 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது.இந்த விவகாரம், உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் உள்ளது.

இதற்கிடையே, தேசிய குடிமக்கள் பதிவேட்டை வெளியிட, வரும், 31 வரை கெடு விதிக்கப்பட்டிருந்தது. தற்போது, பல்வேறு பெயர்கள் விடுபட்டுள்ளதாகவும், பல தகவல்களை சரிபார்க்க வேண்டியிருப்பதாலும், பதிவேட்டை வெளியிடுவதற்கான கெடுவை நீட்டிக்கும்படி, அசாம் மாநில அரசு மற்றும் மத்திய அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.இந்த மனுக்கள், தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, பதிவேட்டை வெளியிடுவதற்கான காலக் கெடுவை, ஆகஸ்ட், 31வரை நீட்டித்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.