டெல்லியில் அம்பேத்கர் மையத்தில் நடந்த விழாவில், அனைத்து நகரங்களையும் குப்பையில்லாததாக மாற்றும் தூய்மை பாரத இயக்கம் 2.0, பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை உறுதி செய்யும் அம்ருத் 2.0 ஆகிய திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர், ‘தூய்மை பாரத இயக்கம் இரண்டாம் கட்டத்தில், கழிவுநீர் நிர்வாகத்தை மேம்படுத்துவது, நகரங்களுக்கு தூய்மையான குடிநீர் கிடைக்க செய்வது, கழிவுநீர் நதிகளில் கலப்பதை தடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இது, அம்பேத்கரின் கனவுகளை நிறைவேற்றுவதில் ஒரு முக்கிய நடவடிக்கை. 2014ல் தூய்மை பிரசாரம் மேற்கொள்ளப்படும் வரை, 20 சதவீத குப்பைகளே கையாளப்பட்டது. ஆனால், இன்று தினசரி 70 சதவீத குப்பைகள் கையாளப்படுகின்றன. இது 100 சதவீதமாக உயர்த்தப்படும். இனி வரும் காலங்களில் சாக்லேட் காகிதங்களை யாரும் கீழே போடாமல், பாக்கெட்டில் வைத்து கொண்டு சென்று குப்பை தொட்டிகளில் போடுவார்கள். குப்பையை வெளியில் வீசக்கூடாது என பெரியவர்களை குழந்தைகள் அறிவுறுத்துவார்கள். குப்பை மூலம் சிலர் சம்பாதிக்கிறார்கள். சிலர் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர்’ என பேசினார்.