தென்மாநிலத்தில், தூய்மையான நகரங்களின் பட்டியலில், தஞ்சாவூர் மாவட்டம், மேலத்திருப்பூந்துருத்தி பேரூராட்சி தேர்வாகி உள்ளது.
மத்திய அரசின், ‘தூய்மை இந்தியா’ திட்டத்தில், நாட்டில் உள்ள, பல்வேறு நகரின் தூய்மை குறித்து, காலாண்டுக்கு ஒருமுறை, ‘சர்வே’ நடத்தப்படுகிறது. அதன் முடிவுகள், டில்லியில், டிச., 31ல் நடந்த விழாவில், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி வெளியிட்டார். அதில், 25 ஆயிரம் பேர் வரை, மக்கள் தொகை உடைய நகரங்கள் பிரிவில், தென்மாநிலங்களில், தஞ்சாவூர் மாவட்டம், மேலத்திருப்பூந்துருத்தி பேரூராட்சி, முதல் காலாண்டில், முதலிடமும்; இரண்டாம் காலாண்டில், இரண்டாம் இடமும் பெற்று சாதனை படைத்துள்ளது. முதல், 150 நகரங்கள் பட்டியலில், தமிழகத்தில் இருந்து இடம்பெற்றுள்ள ஒரே நகரம், மேலதிருப்பூந்துருத்தி பேரூராட்சி மட்டுமே.
இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் குகன்,பேரூராட்சியில், மொத்தம், 15 வார்டுகள் உள்ளன. 9,074 பேர் வசிக்கின்றனர். ‘ஜல் அபியான்’ திட்டங்கள் மூலம், குப்பையை, வீடுகளுக்கே சென்று, பணியாளர்கள் தரம் பிரித்து வாங்கி கொள்கிறோம். குப்பையை தரம் பிரித்து, உயிர் உரங்கள், மண்புழு உரங்களை உருவாக்குவது, ‘பிளாஸ்டிக் பொருட்களை’ சாலை அமைப்பதற்கு பயன்படுத்துவது என, பல பணிகளை செய்து வருகிறோம். குப்பை கிடங்கை, வளம் மீட்பு பூங்காவாக உருவாக்கியுள்ளோம். பேரூராட்சி அலுவலகத்தில், ‘சிசிடிவி’ கேமரா பொறுத்தப்பட்டு, எவ்வித முறைகேடும் இன்றி, பொதுமக்களுக்கு நேர்மையான சேவையை வழங்கி வருகிறோம். பணியாளர்களின் வருகைப்பதிவேட்டை, ‘பயோ மெட்ரிக்’ முறையிலும், குப்பை அள்ளும் வாகனங்களுக்கு, ஜி.பி.எஸ்., கருவி பொருத்தி, அவற்றை கண்காணித்து வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.