தீவிரவாதம் மனித நேயத்துக்கு எதிரானது: பி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்

‘‘தீவிரவாதம் மனித நேயத்துக்கு எதிரானது. இது அமைதி மற்றும் சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டிய நேரம்’’ என பி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.ஜி20 நாடுகளின் சபாநாயகர்கள் பங்கேற்கும் 9-வது பி20 உச்சிமாநாடு டெல்லியில் உள்ள யாசோபூமியில் நேற்று நடைபெற்றது. இதில் ஜி20 நாடுகள் பங்கேற்றன. காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜார் கொலையில் இந்தியா மீது கனடா குற்றம் சாட்டியதை அடுத்து இரு நாடுகள் உறவில் ஏற்பட்ட விரிசல் காரணமாக கனடா இதில் பங்கேற்கவில்லை. இந்த உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி பேசியதாவது:

இந்த உச்சி மாநாடு, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் மக்களின் சக்தியை கொண்டாடுவதற்கான தளம். இந்தியாவில் பி20 உச்சி மாநாட்டை நடத்துவதில் நாங்கள் பெருமையடைகிறோம். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாகவும், ஜனநாயகத்தின் தாயாகவும் நாங்கள் இருக்கிறோம். உலகின் மிகப் பெரிய தேர்தலை இந்தியா நடத்துகிறது. இது இந்திய நாடாளுமன்ற நடைமுறைகளில் மக்கள் வைத்துள்ள ஆழமான நம்பிக்கையை காட்டுகிறது. தேர்தல் நடைமுறைகளை, நவீன தொழில்நுட்பங்களுடன் இந்தியா இணைத்துள்ளது. உலகில் உள்ள நாடாளுமன்றங்கள் மற்றும் சட்டமன்றங்கள், விவாதங்கள் மற்றும் ஆலோசனைகள் நடத்துவதற்கான முக்கியமான இடங்கள். இது தொடர்பான குறிப்புகள் 5 ஆயிரம் ஆண்டுகளுக்குமுன்பே இந்திய வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் சமுதாயநலனக்காக ஒருமித்த முடிவுகள்எடுக்கப்பட்டுள்ளன. நாம் இணைந்து செல்ல வேண்டும், ஒன்றாக ஆலோசிக்க வேண்டும் மற்றும் நம் மனம் ஒன்றுபட வேண்டும் என ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிராம அளவிலான பிரச்சினைகள் பேசி தீர்க்கப்பட்டுள்ளன. தமிழ் நாட்டின் 9-ம் நூற்றாண்டுகுறிப்பு ஒன்று கிராம சபை விதிமுறைகள் விரிவாக கூறுகிறது. உறுப்பினர்களின் தகுதி நீக்கம் குறித்த விதிமுறைகள் 1200 ஆண்டு கால பழமையான குறிப்பில் இடம் பெற்றுள்ளது. இந்தியாவில் ஜகத்குரு பசவேஸ்வரா அனுபவ் மண்டபபாரம்பரியத்தை 12-ம் நூற்றாண்டிலேயே தொடங்கியுள்ளார். இதில்அனைத்து தரப்பு மக்களும் கருத்துக்களை தெரிவிக்க ஊக்குவிக்கப்பட்டுள்ளனர். உலகநாடுகள் பிரிந்திருந்தால், மனிதநேயம் சந்திக்கும் சவால்களுக்கு தீர்வு காணமுடியாது. உலகில் நடைபெறும் அனைத்துவிதமான தீவிரவாதமும் மனிதநேயத்துக்கு எதிரானவை. இது அமைதி மற்றும்சகோதரத்துவத்தை வளர்ப்பதற்கான நேரம். அப்போதுதான் நாம் ஒன்றிணைந்து முன்னேற முடியும். நம்பிக்கையின்மையை போக்கி மக்கள் மைய சிந்தனையுடன் நாம் முன்னேற வேண்டும்.இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.