சிவனுக்குத் தொண்டு புரியும் அடியார்களைத்தான் தங்கள் மனத்தில் வரித்து இருத்தி உள்ளோம், அவர்கள்தான் தங்கள் கணவன்மார்கள் என்பதில் உறுதியாக இருக்கும் பெண்கள் சிவபிரானிடம் விடுக்கும் வேண்டுகோள் இது…
“உலகம், உயிர்ப்பொருட்கள் அனைத்துக்கும் முன்னேயான பரம்பொருளான சிவபெருமானே ! இன்றைக்கும் இனி என்றைக்கும், வரப்போகிற புதுமைகளுக்கு எல்லாம் புதுமையாக விளங்கும் தன்மை பொருந்திய குணங்களைத் தன்னகத்தே கொண்ட பெருமை உடையவனே! “அவனையே தலைவனாகக் கொண்ட அவனது அடியவர்களுக்கும் அடியார்களாக அவர்தம் தாள் பணிவோம். அந்த அடியார்களுக்கு மட்டுமே நாங்கள் உரிமை உடையவர்களாவோம்; அவர்களே எங்கள் கணவராவார்கள். அவர் உகந்து சொல்வதற்கு ஏற்றாற்போல அவர்களது கடைக்கண் குறிப்புக்கு அடிபணிந்து அவர்கள் விரும்பிக் கட்டளையிட்ட வண்ணமே, அவர்கட்கு அடிமையாய் நின்று தொண்டு செய்து இன்புறுவோம். இவ்வாறு அமையும் நற்பாக்கியத்தைத் எங்களுக்கு அருளினால், வாழ்வில் வேறு என்ன குறை இருக்கப் போகிறது எங்களுக்கு? இப்படிச் சொல்லிப் பாடுவோம் எழுந்து” என்கிறார்கள். இறைவனை அடைய எளிய வழி, அவனுடைய அடியார்க்கு நம்மை முழுமையாக அர்ப்பணித்துத் தொண்டு செய்வதுவே.
ஆர்.கிருஷ்ணமூர்த்தி