திருவெம்பாவை – 15

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள்
பேரரையற் கிங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.
 விளக்கம்:
ஒற்றைக் காலால் பூச்செடிகள் குளத்தில் சிவ தவம் செய்கின்றன. அதனால் அவை அதிக அழகு பெறுகின்றன. எம்பெருமான் சிவனது நினைப்பே சித்தமெங்கும் இருக்கும். அம்பலவாணன் புகழைப் பேசியபடி உறக்கத்திலும் நாவு அசைந்துகொண்டே இருக்கும். அவனது கருணையும், பிரியமும் பக்தர்களின் மனதை நெகிழ வைக்கும். அது கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீரை அருவியாய்க் கொட்ட வைக்கும். மண்ணில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து யாரைப் பணிந்து வணங்குகிறோம் தேவர்களையா? பெருமாளையா? பிரம்மாவையா? இல்லை பக்திப் பரவசத்தால், நாம் யார் மீது இப்படி பைத்தியமாய் ஆகிவிட்டோம்? அந்த ஆட்கொள்ளி யார்? அவன், சிவன்தான். அவனைப் பணிந்து வணங்குவோம். பேரரசனாகிய இறைவன்பால் இவ்வாறு பித்துப் பிடிக்கும் தன்மையையும், அவ்வாறு செய்து ஆட்கொள்ளும்வல்லவராகிய சிவபெருமானின் திருப்பாதத்தையும் வாயாரப் பாடி,  கச்சை அணிந்த மார்பகங்களை  உடைய பெண்களே!, நாம் மிக நேர்த்தியான, மலர் நிறைந்த இந்த   புனல்நீரில் ஆடுவோம்! அவனருளாலே அவற்ன்தாள் பணிவோம்,”  என்கிறார் மாணிக்கவாசகர்.