திருவிழா பொருளாதாரத்தின் அடிவயிற்றில் அடிக்கும் போராட்டங்கள்!

நம் சனாதன தர்மத்தின் திருவிழாக்கள் வெறும் சடங்குகள் அல்ல. இறை வழிபாட்டை மையமாகக் கொண்டு, மக்களுக்குப் பல கோணங்களில் நன்மை தரும் வகையில், நம் முன்னோர்கள் அவற்றை அற்புதமாகக் கட்டமைத்துள்ளனர். அதில் மூன்று பொது நலன்கள் அடங்கியுள்ளன – ஆன்மீக நலன், பொருளாதார நலன், சமூக நலன்.
ஆன்மீக நலன்
பண்டிகை நாளில் வீடு முழுவதும் பூஜை, விளக்கு, கோலம், பக்திப் பாடல் என குடும்பத்தில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஒரு ஆன்மீகச் சூழல் கிடைக்கிறது. அதன்மூலம் நமது வாழ்வியல் முறை, பண்பாடு, கலாச்சாரம் அடுத்த தலைமுறைக்கு இயல்பாகக் கடத்தப்படுகிறது.
பொருளாதார நலன் – பணம் யாருக்குப் போகிறது?
பண்டிகைக்கு நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளும், ஒரு உழைப்பாளியின் வீட்டில் விளக்கேற்றுகிறது:
 பூஜைக்கான காய்கறி, பழம் − விவசாயிகள், வியாபாரிகள்
 கொலு பொம்மை, அகல் விளக்கு − மண்பாண்டக் கலைஞர்கள்
 பூ − பூ விவசாயிகள், பூ வியாபாரிகள்
 பட்டாசு − பட்டாசுத் தொழிலாளர்கள்
 புதுத் துணிமணி − நெசவாளர்கள், தையல் கலைஞர்கள், ஜவுளிக் கடைகள், பருத்தி விவசாயிகள்
 பலகாரம் − கரும்பு விவசாயிகள், மளிகை, இனிப்பு வியாபாரிகள்
சமூக நல்லிணக்கம்
எல்லோரும் சேர்ந்து ஒரு திருவிழாவைக் கொண்டாடும்போது, உறவுகள் இணைகின்றன, அக்கம் பக்கத்தார் ஒன்று கூடுகிறார்கள், பகிர்ந்து உண்ணும் பலகாரம் மனித மனங்களை இணைக்கிறது. அதனால்தான் திருவிழாக்கள் நம் நாட்டுக் கலாச்சாரத்தின் உயிர்நாடி என்கிறோம்.
அறுவடைக் காலத்தில் போராட்டம் – பேராபத்து
சமீபகாலமாக அரசியல் ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் தேர்ந்தெடுக்கும் நாட்கள் பண்டிகை நாட்களாகவே இருக்கிறது. இப்போது நவராத்திரி, விஜயதசமி, தீபாவளி, குடியரசு தினத்தின் போது ஜனவரி என்பதால் பொங்கல் என, இதனை ஒரு திட்டமிட்ட சதியாகவே பார்க்க வேண்டி இருக்கிறது. இந்திய வணிகர்கள் கூட்டமைப்பான CAIT மதிப்பீட்டின்படி 2025 நவராத்திரி முதல் தீபாவளி வரையிலான 22 நாட்களில் ₹6.05 லட்சம் கோடி வர்த்தகம் நடந்தது. – முந்தைய ஆண்டை விட, சுமார் 25% அதிகம். இதில் ஏறக்குறைய 85% பாரம்பரிய, கார்ப்பரேட் அல்லாத சிறு கடைகள் மூலம் நடந்தது; சுமார் 50 லட்சம் தற்காலிக வேலைவாய்ப்புகள் உருவாகின.
 கான் மார்க்கெட்டில் ஒரு கடைக்கு ஒரு நாளில் ₹1.5 லட்சம் இழப்பு என்கிறார்கள் அங்குள்ள வணிகர்கள்.
 கனாட் பிளேஸ் சுற்றுவட்டாரத்தில் நாள்தோறும் சுமார் ₹100 கோடி இழப்பு என்கிறது புது டெல்லி வணிகர் சங்கம்.
 போராட்டத்துக்கு 4 – 5 நாள் முன்பும், பின்பும் சந்தைகளில் கூட்டமே இல்லை என்கிறார்கள், லஜ்பத் நகர் வணிகர்கள்.
போராட்டம் வன்முறையாக மாறவேண்டிய அவசியம்கூட இல்லை. வன்முறையாக மாறிவிடுமோ என்ற அச்சமே மக்களை வீட்டிலேயே முடக்கி விடலாம்!
போராட்டங்களும் அதன் விளைவுகளும் ஏற்படுத்தியிருக்கும் அபாயம், டெல்லி கிரானா சங்கம், மற்றும் வர்த்தக அமைப்புகளை உச்ச நீதிமன்றத்தை நாடும் அளவிற்கு தள்ளியுள்ளது. போராட்டக்காரருக்கு அது சில நாட்கள்தான். ஆனால் ஒரு சிறு வியாபாரிக்கு அந்த சில நாட்கள் பல மாதக் கடன் சுமையாக மாறலாம்!
அதே சமயம், ஒரு கடையின் வியாபாரம் என்பது அந்தக் கடைக்காரரின் தனிப்பட்ட பிரச்சனை மட்டுமல்ல. அது நாட்டின் பொருளாதாரத்தோடும், அரசின் வருவாயோடும், ஒவ்வொரு குடிமகனின் நலனோடும் தொடர்புடையது. வியாபாரியின் நஷ்டத்தை அவருடைய பிரச்சனையாக மட்டுமே பார்க்காமல், நாட்டின் பொருளாதார இழப்பாகவும் பார்க்க வேண்டும்!
பாதிப்பு இந்த ஆண்டோடு முடிந்து விடுமா?
இங்கேதான் பலரும் கவனிக்கத் தவறும் மிக முக்கியமான பொருளாதார விளைவு இருக்கிறது. இந்த ஆண்டு பண்டிகையில் ₹ 5 லட்சம் விற்பனை செய்யத் திட்டமிட்ட ஒரு வியாபாரி, கடன் மற்றும் இதர செலவுகளால் நஷ்டமடைந்து விட்டதாக வைத்துக்கொள்வோம். அடுத்த ஆண்டு அவரால் முன்புபோலச் சரக்குகளை வாங்க முடியுமா? வங்கியிடமோ, கடன் கொடுப்பவரிடமோ மீண்டும் அதே அளவு நிதி கிடைக்குமா?
கொள்முதல் குறைந்தால் உற்பத்தியாளரின் விற்பனை குறையலாம். உற்பத்தி குறைந்தால் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படலாம். வருமானம் குறைந்தால், குடும்பங்களின் வாங்கும் சக்தியும் குறையலாம். இதுதான் பொருளாதாரத்தில் “Ripple Effect” எனப்படும் தொடர் தாக்கம். இன்றைய வியாபார இழப்பு நாளைய முதலீட்டுக் குறைவாகவும், அடுத்த ஆண்டின் வேலைவாய்ப்பு இழப்பாகவும் மாறக்கூடும்!
புவிசார் அரசியலில் இந்தியாவுக்கு
ஏற்படும் சவால்!
இன்று உலக நாடுகள் ஒவ்வொன்றும் தங்களுக்குச் சாதகமான வர்த்தக ஒப்பந்தங்கள், வரிவிதிப்புச் சலுகைகள், முதலீடுகள், பாதுகாப்பு ஒப்பந்தங்கள் ஆகியவற்றைப் பெறப் போராடுகின்றன. இந்தியாவும், பல நாடுகளுடன் முக்கியமான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருக்கிறது.
இப்படிப்பட்ட நேரத்தில் இந்தியாவிற்குள் தொடர்ச்சியான அமைதியற்ற சூழல் இருப்பதாகப் பிம்பம் உருவானால், அதை வெளிநாட்டு அரசுகளும், முதலீட்டாளர்களும் தங்கள் மதிப்பீடுகளில் எடுத்துக்கொள்ளக்கூடும். இது ஆபத்தல்லவா?
நமது பிரதமர் வெளிநாடுகளுடன் இந்தியாவின் நலனுக்காக வலுவாகப் பேச்சுவார்த்தை நடத்தும்போது, உள்நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையும், சர்வதேச நம்பிக்கையும் அவருக்கு கூடுதல் பலமாக அமையும்.
ஜனநாயகம் யாருக்காக? மக்களுக்காகத்தானே?
ஜனநாயகத்துக்காகப் போராடுகிறோம் என்ற பெயரில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் படுவதை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்? போராடுவதற்கான உரிமையையும், வியாபாரம் செய்வதற்கான உரிமையையும், ஒருசேரப் பாதுகாப்பது அரசுக்கும் போராட்டக்காரர்களுக்கும் உள்ள பொறுப்பு. மக்களுக்காகப் போராடுங்கள். ஆனால் அந்த மக்களின் பிழைப்பையே பலியாக்கி விடாதீர்கள்!
போராடும் உரிமையை யாரும் மறுக்கவில்லை. ஆனால் நம் திருவிழாக்கள் ஆன்மீகம், பொருளாதாரம், நல்லிணக்கம் என்ற மூன்று தூண்களில் நிற்கின்றன. அவற்றைச் சிதைக்கும் போராட்டம் நாட்டுக்கும் கலாச்சாரத்துக்கும் பேராபத்து. இந்தப் புரிதல் நம் அனைவருக்கும் கண்டிப்பாக வேண்டும். இந்தப் பண்டிகைக்கு உங்கள் தெருவின் சிறு கடைகளில் வாங்குங்கள், ஒரு ஏழையின் வீட்டில் தீபம் ஏற்றுங்கள்.
கட்டுரையாளர்: மணியன் கோபி