திருவருட் பிரகாச வள்ளலார்

“அருட்பெருஞ் ஜோதி; அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணை; அருட்பெருஞ் ஜோதி” என்ற மகா மந்திரத்தை உலகம் உய்ய அருளியவர் திருவருட் பிரகாச வள்ளலார். கருவிலே திருவுடையவராய்த் தோன்றிய இந்த மகாபுருஷர் தன்னுடலையே ஒளியுடம்பாக ஆக்கிக்கொண்டு இறைவனோடு இரண்டறக் கலந்தவர்.

இளம் வயதில் ஆசிரியர் ’ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்… ‘ என உலக நீதிப் பாடலைப் பாட, அதைக் கேட்ட இராமலிங்கம், அப்படி எதிர்மறையான எண்ணங்களை பிஞ்சு எண்ணங்களில் பதியச் செய்வது தவறு என்று கூறிப் பாடிய ‘ ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்…’ என்ற பாடல் அவர் ஒரு ஞானக் குழந்தை என்பதை உலகிற்கு உணர்த்தியது.

சென்னையின் பொய்யான வாழ்க்கைமுறையைக் கண்டு வெறுத்த வள்ளலார், மருதூர், கடலூர், வடலூர் போன்ற இடங்களுக்குச் சென்று தங்கினார். இறைவனின் மீது ’திருவருட்பா’ பாமாலைகளைப் புனைந்தார். வடலூரில் சமரச சன்மார்க்கச் சங்கத்தையும், சத்தியத் தருமச் சாலையையும் நிறுவினார். தாம் உருவாக்கிய சித்தி வளாகத் திருமாளிகையில் பல்வேறு அற்புதங்களைப் புரிந்தார்.

ஒருமுறை, மறுநாள் சமைப்பதற்கான அரிசி உள்ளிட்ட பொருட்கள் தீர்ந்துவிட்டன. வரும் அதிதிகளுக்கு எப்படி பசியாற்றுவது என பணியாளர்கள் தயங்கி அடிகளாரிடம் தெரிவித்தனர். அதனைக் கேட்ட அடிகளார் தியானத்தில் ஆழ்ந்தார். சிறிது நேரம் கழித்து திரும்பி வந்தவர், “கவலை வேண்டாம். தேவையான பொருட்கள் நாளை வரும்” என்றார்.

பணியாளர்களுக்கோ ஒன்றும் புரியவில்லை. மறுநாள் காலை பணியாளர்கள் வெளியே சென்று பார்த்த பொழுது, மூன்று வண்டிகள் முழுவதும் மூட்டை மூட்டையாய் அரிசிகள், உணவுப் பொருட்கள் வந்திருந்தன.

ஆச்சர்யத்துடன் அதனைக் கொண்டு வந்தவரிடம் கேட்டபோது, அவர், தான் திருத்துறையூரில் இருந்து வருதாகவும், முந்தைய நாள், அடிகளார் கனவில் வந்து உணவுப் பொருட்கள் வேண்டுமென்று கேட்டதாகவும், அவ்வாறே கொண்டு வந்திருப்பதாகவும் கூறினார்.

வள்ளலாரைப் புகைப்படம் பிடித்து, அதனைத் வைத்து வழிபட வேண்டும் என்று சில பக்தர்கள் ஒரு புகைப்படக்காரரை அழைத்துவந்தனர். வள்ளலார் இதற்கு உடன்படாத பொழுதும் அவர்கள் அவரைப் பல முறை படம் பிடித்தனர். ஆனால் அந்தப் புகைப்படத்தில் வள்ளலாரின் வெண்மையான ஆடை மட்டுமே விழுந்திருந்தது. வள்ளலாரின் உருவம் விழவில்லை. அந்த அளவிற்கு ஒளியுடல் பெற்றவராக வள்ளலார் திகழ்ந்தார்.