நாட்டில் செல்வம் மிகுந்த கோயில்களில் ஒன்றாக கருதப்படும் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலை திருவிதாங்கூர் மன்னர் குடும்பம் நிர்வகித்து வந்தது. இந்நிலையில், கோயில் நிர்வாகத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாக தொடரப்பட்ட வழக்கில் 2011 ஜனவரி 31-ஆம் தேதி தீர்ப்பளித்த கேரள உயர்நீதிமன்றம், கோயிலை மாநில அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருமாறு கூறியது. உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் விசாரணைக்குப் பின்னர் தேதி குறிப்பிடப்படாமல் கடந்த ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப் பட்டிருந்தது. இந்நிலையில் இறுதித் தீர்ப்பு திங்கள் கிழமை வழங்கப்பட்டது.
திபதிகள் யு.யு.லலித், இந்து மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த முந்தைய ஆட்சியாளரின் மரணம், கோயிலை நிர்வகிக்கும் மன்னர் குடும்ப கடைசி ஆட்சியாளரின் சகோதரரான மார்த்தாண்ட வர்மாவின் உரிமையைப் பாதிக்காது. அதேபோல, நிர்வாக குழுவைக் கட்டுப்படுத்தவும் மாநில அரசுக்கு உரிமை இல்லை. கோயில் நிர்வாகம் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்திடம் தொடர்ந்து இருக்கும். இடைக்கால ஏற்பாடாக கோயிலை நிர்வகிக்க திருவனந்தபுரம் மாவட்ட நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைக்க வேண்டும் என நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.