மார்கழி நீராடி கேசவனைப் பாடி அவனை அடைய தோழியை எழுப்பும் ஆண்டாள், அவள் எழாதது கண்டு, பேய் போல மறதியும் மந்த புத்தியும் உடைய பெண்ணே! என்று அழைத்து, விடிந்துவிட்டதற்கு அறிகுறியாக நடைபெறும் நிகழ்ச்சிகளை எல்லாம் அடுக்குகிறாள்.
ஆனைச்சாத்தன் பறவை பகலெல்லாம் இரை தேடச் செல்லப்போவதால், தங்கள் இணைப் பறவைகளிடம் கொஞ்சநேரம் கொஞ்சிப் பேசிக் கொண்டிருக்குமாம். ஆண்டாள் தோழியை, ‘ஆனைச்சாத்தன் பறவைகள் கீசுகீசு என்று கொஞ்சிப் பேசிக் கொண்டிருக்கும் அந்த காதல் மொழி சப்தமானது உன் காதுகளில் விழவில்லையா? பகவானை தரிசிக்க செல்லமுடியாமலும் பேய்கள் உன்னை எழ முடியாதபடி செய்கிறதா? பொழுது விடிந்ததுமே கோபியர் கூந்தலில் சூடியுள்ள மலர்கள் காற்றில் அசைந்து மணம் பரப்ப, அவர்கள் மத்தினால் தயிர் கடையும் சப்தம் கேட்கவில்லையா? (தயிராரவம் என்பது கடையும்போது ஆய்ச்சிப் பெண்கள் கண்ணனைக் குறித்துப் பாடும் பாட்டொலியும், கடையும்போது அணிந்திருக்கும் வளையல்களும் ஆபரணங்களும் ஒன்றோடு ஒன்று உரசி சப்தம் எழுப்பும் இத்தனை சப்தங்களும் கூடவா உனக்குக் கேட்கவில்லை? அப்படி என்ன தூக்கமோ? என்று வினவுகிறாள்.