“சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்…” என்ற பாடலில், “அழகான வைகறைப் பொழுதில் அனைத்துத் தோழி மாரும் எழுந்து வந்து, கண்ணனை வணங்கி, அவனது திருவடிகளைப் போற்றும் காரணத்தைக் கண்ணன் கேட்டருள வேண்டும்” என்கிறாள் ஆண்டாள். “பசுக்களை மேய்த்து உயிர் வாழும் தங்கள் ஆயர் குலத்துதித்த கோவிந்தனே! உன்னிடமிருந்து விரும்பியவற்றைப் பெற்றவுடன், விலகும் மக்களல்ல நாங்கள்.
எத்தனை பிறவி எடுத்தாலும், ஏழேழ் பிறவிகளிலும் உனக்கு உற்றார் உறவினராகவே இருந்து, உனக்கு மட்டுமே அடிமை செய்பவராக நாங்கள் தொடர்ந்து இருக்க வேண்டும்! இதை உணர்ந்து, எங்களின் மற்ற ஆசைகளை நீக்கி அருள வேண்டும் கண்ணா !” என்கிறார்கள் தோழிகள். இறைவனை அடைவதற்கு உண்மையான அன்பு மட்டும் போதும். அந்த அன்பு இல்லாவிட்டால் எந்தெந்த வழியில் முட்டி மோதினாலும் பரம பதம் கிடைக்காது.