கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆயர்குலத்து உன்றன்னை
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை
சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே
இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
எவ்விதக்குறையும் இல்லாத கோவிந்தனே! பசுக் கூட்டங்களின் பின்னால் சென்று அவற்றை மேய்த்து, பசுக்கள்
எங்களுக்கு கொடுக்கும் பால், தயிர், தயிர்ச்சோறு போன்றவற்றை உண்பவர்கள் நாங்கள். எங்களுக்கு அறிவு
என்று பெரியதாக ஒன்றும் இல்லை. ஓம் நமோ நாராயணாய என்கின்ற பெரிய பேர் கொண்ட எட்டெழுத்து
மந்திரத்தை உச்சாடனம் செய்கின்ற மேற்கொள்ளல் எல்லாம் எங்களுக்குத் தெரியவில்லை. விரதம் இருக்கும்
அனுஷ்டான விதி என்பதெல்லாம் அறியாத பிள்ளைகள் நாங்கள்! உன்னிடமுள்ள உரிமையின் காரணமாக
ஒருமையில் எளிமையாக கோவிந்தா என்று சிறுபேர் தாங்கிய நாமத்தை வெள்ளந்தியாக விளிக்கிறோம்.
ஆனால், உன்னை தலைவனாக அடைந்ததால் எங்களுக்கு வைகுந்தம் உறுதியென்பதை பிறவிப்பயனாக
அடைந்திருக்கிறோம் என்கின்ற உண்மை ஒன்று மட்டும் எங்களுக்குத் தெரியும். அதனால் உன்னோடு
எங்களுக்குள்ள உறவைப் பிரிக்க எவராலும் இயலாது. எங்களைக் காத்தருள்வீராக !!