உத்தமனாம் கண்ணனைப் பாடி நோன்பு நோற்போர் பெறும் நீங்காத செல்வம்
ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால்,
தீங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெறும் செந்நெல் ஊடு கயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்
தேங்காதே புக்கு இருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்!!
மூன்று உலகத்தையும் தன் காலால் அளந்த த்ரிவிக்கிரமனின் நாமங்களைப் பாடி நாம் நோன்பிருந்து நீராடி வழிபட்டால்.
நாடு முழுவதும் திங்கள் மும்மாரி பொழியும். அதேநேரம் எந்த ஒரு சேதத்தை யும் பயிர்களுக்கோ, மனிதர்களுக்கோ, இதர ஜீவராசிகளுக்கோ ஏற்படுத்தாதபடி அளவோடு மழை பெய்யுமாம்.
அப்படி மழை வளத்தால் வயல்களில் செழித்து வளர்ந்திருக்கும் நெற்பயிர்களின் ஊடாக தேங்கி இருக்கும் நீரில் மீன்கள் துள்ளி நீந்தியபடி இருக்கும். தேன் நிறைந்த குவளை மலர்களில் எல்லாம் வண்டுகள் தேனைப்பருகுவதற்காக மயங்கி இருக்கும். இல்லங்களில் கட்டப்பட்டு இருக்கும் பசுக்கள் கூட, தங்கள் கன்றுகளுக்கு ஊட்டியது போக, கறப்பவர்களுக்கும் அவர்களுடைய குடம் நிறையும்படி பாலமுதைப் பொழியுமாம்.
இயற்கையின் அனைத்துப் படைப்புக்களும் பாதுகாப்பாக வளரும் தன்மை இவ்வரிகளில் தெரிகிறது. கிருஷ்ண பக்தியானது
இப்படியான வளங்களையும், நீங்காத செல்வங்களையும் நமக்குத் தருமாம்.
நீங்காத செல்வம் என்று கோதை நாச்சியார் இங்கே குறிப்பிடுவது,உலகாயத வாழ்க்கையில் அன்றாடம் துய்த்து மகிழ்வதான பொருளியல் சார்ந்த சுகபோகங்களை மட்டுமல்ல, நிறைவானதும் அதற்கு மேல் எதுவுமே இல்லாததுமான பகவான் கோவிந்தனின் திருவடிகள் என்னும் செல்வத்தையே.
ஆர்.கே.