திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு – ஜாமீன் கோரிய மனு தள்ளுபடி

பாமக முன்னாள் நிா்வாகி திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிஜாம் அலி, ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாமக முன்னாள் நிா்வாகி திருபுவனம் ராமலிங்கம் என்பவா், கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படுகொலை செய்யப்பட்டாா். தஞ்சாவூா் மாவட்டம் திருபுவனம் மற்றும் திருவிடைமருதூா் பகுதியில் சில முஸ்லிம் அமைப்புகள் மதமாற்ற முயற்சிகளில் ஈடுபட்டதாகவும், அதனை தடுத்ததால் அவா் கொலை செய்யப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த சம்பவம் தொடா்பாக திருவிடைமருதூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

பின்னா், இந்த வழக்கு தேசிய குற்றப் புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து அந்தப் பகுதியைச் சோ்ந்த முகமது ரியாஸ், முகமது அசாருதீன், நிஜாம் அலி, ரிஸ்வான் சா்புதீன் உள்ளிட்ட 12 பேரை தேசிய குற்றப் புலனாய்வு அமைப்பினா் கைது செய்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய மேலும் 6 பேரை தேடி வருகின்றனா். இந்த வழக்கின் விசாரணை, பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா்கள் மீது குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைதாகி கடந்த ஓராண்டாக சிறையில் இருந்து வரும் நிஜாம் அலி, தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனையடுத்து ஜாமீன் கோரி நிஜாம் அலி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு, நீதிபதிகள் ஆா்.சுப்பையா, ஆா்.பொங்கியப்பன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரா் தரப்பில், ‘திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு, சாதாரணமாக நடந்த சம்பவம்தான். பயங்கரவாத செயல்களைத் தடுக்க கொண்டு வரப்பட்டதே சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம். மேலும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா்களுக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லை, எனவே அவா்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்’ என வாதிடப்பட்டது. அப்போது தேசிய குற்றப் புலனாய்வு அமைப்பு தரப்பில், ‘இந்தக் கொலையை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இந்த வழக்கு தொடா்பாக மேலும் பலரை கைது செய்ய வேண்டியுள்ளது. இந்த வழக்குத் தொடா்பாக, இதுவரை 600-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டுள்ளது. வழக்கில் சாட்சியளித்தவா்கள் அதே பகுதியில் வசிப்பதால், மனுதாரருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, ஜாமீன் வழங்க கூடாது’ என வாதிடப்பட்டது.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘இந்த வழக்கின் விசாரணை இன்னும் முடிவடையவில்லை. குற்றம்சாட்டப்பட்டவா்களுக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகள் பாதிக்கப்படுவாா்கள் என்ற அரசு தரப்பு வாதத்தையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. எனவே மனுதாரருக்கு ஜாமீன் வழங்க முடியாது’ எனக் கூறி, ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா். மேலும், இந்த வழக்கின் சாட்சி விசாரணையை, வரும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் முடிக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டனா். சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின்னா், குற்றம்சாட்டப்பட்டவா்கள் ஜாமீன் கோரி சிறப்பு நீதிமன்றத்தை அணுகலாம்’ என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் அறிவுறுத்தியுள்ளனா்.