தேர்தல் அறிக்கைகள் என்பது தொலைநோக்கு பார்வையோடு, ஆட்சிக்கு வந்தால் என்ன செய்ய போகிறோம் என்பதை பற்றிய முழு விவரங்கள் அடங்கிய ஆவணம். தேர்தல் வாக்குறுதிகள் மூலம் பெயரைத் தட்டிக் கொண்டு போய்விடுவார்களோ என்ற அச்சத்தின் விளைவாகவே இரு பெரும் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் வெளி வந்துள்ளன. இரண்டு அறிக்கைகளிலும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள திட்டங்களை செயல்படுத்துவார்களா என்ற சந்தேகமும் எழுகின்றது.
ஈழத் தமிழர் விவகாரம், நீட் தேர்வு ரத்து, கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றம் செய்வது, பழைய ஓய்வூதிய திட்டம், வேளாண் துறைக்கு தனி பட்ெஜட் போடுவது போன்ற விஷயங்களில் இரண்டும் ஒன்றாகவே இருக்கிறது.
தி.மு.க. வாக்குறுதிகள்
தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலங்கள் அனைத்தும் தமிழில் செயல்படத்தக்க வகையில் இணை ஆட்சி மொழியாக தமிழை அங்கீகரிக்க சட்ட திருத்தம் கொண்டு வரப்படும்.
எப்பொழுதாவது தி.மு.க. இது சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் தனிநபர் தீர்மானம் கொண்டு வந்ததா? தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியிலிருந்த போது கூட தலைமைச் செயலகத்திலிருந்து வரும் உத்தரவுகள் ஆங்கிலத்தில்தான். அதை முழுமையாக மாற்ற எந்த முயற்சியும் மேற் கொள்ளவில்லை. ஆனால் தோல்வி ஏற்படும் போது மட்டும் தி.மு.க.விற்கு தமிழ்ப் பாசம் பொங்கும்.
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதற்கு அரசியல் சட்ட திருத்தம் கொண்டு வரப்படும். (காங்கிரஸ் கட்சியின் தலைமையில் ஆட்சியிலிருந்தபோது, தி.மு.க.வின் ஒப்புதலு டன் மாற்றம் செய்யப்பட்ட போது ஏன் தடுக்க வில்லை.) ஜி.எஸ்.டி. அதிகபட்சம் 28 சதவீதம் இருப்பதால், மாற்றி அமைக்கப்படும். (இதுவரை ஜி.எஸ்.டியினால் சிறு, குறு தொழில்கள் பாதிப்படைந்துள்ளது என மேடைதோறும் முழங்கியவர்கள், தற்போது ஆதரிப்பது ஏன்?) சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்த உரிய சட்டம் கொண்டு வரப்படும்.- (பா.ஜ.க. கொண்டு வந்தால் அது சர்வாதிகாரச் சட்டம், வாய்ப்பூட்டுச் சட்டம் என்பார்கள்) கூட்டணி கட்சிகள் ஏற்றுக்கொள்ளுமா என்ற சந்தேகம் எழும். இந்திய கலாச்சாரத்திற்கு புறம்பான வகையில் தி.மு.க.வின் ஆதிக்கத்தில் உள்ள ஊடகங்கள் செய்திகளை வெளியிடுவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?
நீட் தேர்வு வேண்டாமாம். மக்கள் இதை ஏற்றுக் கொண்டு விட்டார்கள். தி.மு.க. அமைச்சர்கள் நடத்துகின்ற மருத்துவக் கல்லூரிகள் உண்டு கொழுக்க வேண்டும் என்பதற்காக கூறப்பட்டுள்ள திட்டம் இது. கடந்த 11 ஆண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டுள்ள சேது சமுத்திர திட்டம் அமல்படுத்தப்படும். இது ஏடாகூடம். ஏன் என்றால் காங்கிரஸ் கட்சியில் கூட்டணியில் அங்கம் வகித்த தி.மு.க. ஆறு ஆண்டுகாலம் ஏன் வாய் திறக்கவில்லை?
ஒரு கோடி பேருக்கு சாலைப் பணியாளர்கள் வேலை, 50 லட்சம் பெண்களுக்கு மக்கள் நலப் பணியாளர்கள் வேலை, வருமான வரி உயர்வு 8 லட்சம்; ஒட்டுமொத்த இந்தியாவிற்கான வாக்குறுதியை கற்பனையாக அள்ளித் தெளித்துள்ளார்கள். தி.மு.க.வினர் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றாலும் சாத்தியப்படாத ஒன்றை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள்.
மத்திய அரசின் வருமானத்தில் 60 சதவீதம் மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டும். இது தி.மு.க. கூறிய ஆளுநர் முறையை ஒழிக்க வேண்டும் என கூறியது தான் ஞாபகத்திற்கு வருகிறது. 1967க்கு முன்னர் தி.மு.க.வினர் ஆட்டுக்கு தாடியும் ஆட்சிக்கு ஆளுநரும் தேவையா என்ற கேள்வியை எழுப்பினார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆளுநர் பதவியை ஒழிப்போம் என்றார்கள். ஆனால் இது நாள் வரை இதுபற்றி வாய் திறக்கவில்லை. அதேபோல் தான் இந்த வாக்குறுதி.
அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டத்தை கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளது வேடிக்கையானது. தி.மு.க. கூட்டணியில் பிரதமராக வரக் கூடிய காங்கிரஸ் கட்சி இன்று வரை இது பற்றிய கருத்துக்களை பரிமாறவில்லை. 2002ல் இந்த திட்டம் அமலுக்கு வந்துள்ளது. 2004 முதல் 2014 வரை ஆட்சியிலிருந்த தி.மு.க. ஏன் இதை ரத்து செய்ய முன் வரவில்லை-?
10 ஆண்டு காலம் மத்தியில் ஆட்சியிலிருந்த போது தமிழ் மொழிக்கு என்ன செய்தார்கள் என்ற கேள்விக்கும் கச்சத் தீவை மீட்க என்ன நிர்பந்தம் மத்திய அரசுக்கு கொடுத்தார்கள் என்ற கேள்விக்கும் பதில் கிடைக்காது. ஏழு பேர்களை விடுவிக்க தி.மு.க. கோரியதை காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்கிறதா? இதுவரை காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டங்களில் இது சம்பந்தமான தீர்மானங்கள் நிறைவேற்றப் படவில்லை. அல்லது நீதிமன்றத்தில் மனு கொடுக்கப்பட்டதா என்பதற்கும் பதில் இல்லை. எதையெல்லாம் தடுத்தார்களோ அதையே மீண்டும் கொண்டு வருவோம் என்பது வாக்காளர்களை ஏமாற்றும் வேலை.
நாட்டின் அனைத்து முக்கியமான பிரச்சினை களையும் தேர்தல் அறிக்கையில் தி.மு.க. கொண்டு வந்துள்ளது. ஆனால் இவை அனைத்தும் மத்திய அரசின் அதிகார வரம்புக்குள் இருப்பவையாகும். முழு வலிமையுடன் ஆட்சியில் அமர கூடிய கட்சியால் மட்டுமே செயல்படுத்த கூடிய விஷயங்களை வெறும் 20 நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.வால் செயல்படுத்த முடியுமா? குறிப்பாக பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு, இந்த மசோதாவிற்கு தி.மு.க.வின் கூட்டணியில் உள்ள லாலு பிரசாத் யாதவ் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார். முந்தைய ஐ.மு.கூ. ஆட்சியின் போது, லாலுவின் எதிர்ப்பின் காரணமாகவே பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா கொண்டு வர இயலவில்லை என்பதை ஸ்டாலினுக்கு புரிய வைக்க வேண்டும்.