தேர்தல்: தேசம் தயார்!

பிறவி தேசபக்தரான டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் ஆர்.எஸ்.எஸ்ஸை 1925 ல் துவக்குவதற்கு முன் காங்கிரஸ் உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட இயக்கங்களில் தீவிரப் பங்கேற்றார். நாகபுரியில் ஒரு தேர்தலின் போது ஹெட்கேவாரின் நண்பரை எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளர், பிரச்சார மேடையில் ஹெட்கேவாரின் நண்பரை காட்டமாக விமர்சித்தாலும் ஹெட்கேவாரைப் பற்றிக் குறைசொல்ல ஏதுமில்லை என்று ஒப்புக்கொள்ளும் அளவிற்கு ஹெட்கேவார் அப்பழுக்கற்றவராக விளங்கினார். ஹெட்கேவார் சராசரி பாரதக் குடிமகனை சரியாக அடையாளப்படுத்துகிறார். தேர்தல் பிரச்சார மேடையில் காணாமல் போவது இந்த அடையாளம்தான்.

 மாண்புமிகு மக்கள்

எனவேதான், ஹெட்கேவார் மறைவிற்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ்ஸை 1940 முதல் 1973 வரை வழிநடத்திய ஸ்ரீ குருஜி கோல்வல்கர் “தேர்தல் வந்துவிட்டாலே பொது மேடைகளில் கண்ணியம், பண்பு இவை அடிபட்டுப் போவது எனக்குக் கவலை அளிக்கிறது” என்று ஒரு முறை குறிப்பிட்டார். நெரிசலான பேருந்தில், ரயிலில், கடைவீதிகளில் சாமானியர்கள் இங்கிதத்துடன் அனுசரித்து நடப்பதுதான் கண்கூடான நடைமுறை. அதென்னவோ தேர்தல் மேடை என்றாலே மக்களைப் பிரித்து மோதவிடுவது வாடிக்கை ஆகிவிடுகிறது.

பாரத மண்ணில் பாமரர்கள் (வி..பி அல்லாதவர்கள்) பண்பாளர்களாகவே நீடிக்கிறார்கள். இதோ சான்றுகள்:

தென்கச்சி

ஆண்டு 1970. தென்கச்சி கிராமத்தில் உள்ளாட்சித் தேர்தல். ஊர் மக்கள் ஒன்றுகூடி பஞ்சாயத்துத் தலைவரை ஏகமனதாக அறிவிப்பதுதான் அங்கே பழக்கம். தேர்தலே நடந்ததில்லை. ஆனால் இரண்டு வேட்பாளர்கள் களத்தில் நின்றதால் அந்த ஆண்டு தேர்தல் அவசியமாயிற்று. இதில் அந்த ஊர்க்காரரான திரைப்படப் பாடலாசிரியர் மருதகாசிக்கு சங்கடம் ஏற்பட்டது. வேட்பாளர்களில் ஒருவர் அவர் மகன்; இன்னொருவர் அவர் மருமகன்! ஊரின் நல்லிணக்கத்தை பாதிக்காதிருக்க அவர் ஒரு காரியம் செய்தார். வீடுவீடாகப் போய் வாக்காளர்களிடம், ”இரண்டு பேருமே எனக்குப் பிரியமானவர்கள்தான். யார் ஜெயித்தாலும் எனக்கு சந்தோஷம்தான்” என்று சொல்லிவிட்டு வந்தார். தேர்தலில் மருமகன் ஜெயித்தார். மருதகாசி, மகன் கையில் மாலையை கொடுத்து மருமகனுக்குப் போடச் சொன்னார். அப்போது ஒரு மூதாட்டி வந்து ஜெயித்தவர் தோற்றவர் இருவரையும் ஒன்றாக நிற்க வைத்து மங்கல ஆரத்தி எடுத்தபடி கூறினார்: “ரொம்ப நல்லதுப்பா. ரெண்டு பேரும் ஒண்ணாவே இருக்கணும்னுதான் ஊர்ல எல்லாருக்கும் ஆசை”. தேர்தல் வந்து ஊர் ஒற்றுமையை பாதிக்க விடக் கூடாது என்று அந்த ஊர் மக்கள் மனதார விரும்பியதையே இது காட்டியது இன்று ஒரு தகவல்புகழ் தென்கச்சி கோ. சுவாமிநாதன்தான் அந்த மருமகன்!

தொட்டியம்

ஆண்டு 2004. தேதி மே 12. லோக்சபா தேர்தல் நடந்து கொண்டிருந்தது. தொட்டியம் சட்டமன்றத் தொகுதிப் பகுதிக்கான துணை தேர்தல் அதிகாரியாக பணியில் இருந்தார் தொட்டியம் வட்டாட்சியர் ஆறுமுகம். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட வாக்குப் பதிவுக்கான தளவாடங்களை சாவடிகளுக்கு அனுப்பும் பணியை கண்காணித்துக் கொண்டிருந்தார். அப்போது தகவல் வந்தது – துறையூரில் அவரது மாமியார் காலமாகிவிட்டார்கள் என்று. ஆறுமுகம் பாதியில் தேர்தல் பணியை விட்டுவிட்டுப் போய்விடவில்லை. வாக்குப் பதிவு நேரம் முடியும் வரை அங்கேயே இருந்தார். அடுத்து வாக்குப் பதிவு தளவாடங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பப்படுவதை உறுதி செய்தார். அது முடிய இரவு நெடுநேரம் ஆனது. காலையில் அவர் வாக்கு எண்ணும் மையத்தில் பணியில் இருப்பது தெரியவந்தது. தகவல் தெரிந்தும் மாவட்ட ஆட்சியர் அண்ணாமலை ஸ்தலத்திற்கு வந்தார். ஆறுமுகத்தின் கடமை உணர்வைப் பாராட்டினார். வட்டாட்சியரை உடனே பணியிலிருந்து விடுவித்து அனுப்புமுன் ஆறுமுகத்தை அங்கிருந்த செய்தியாளர்களிடம் அறிமுகம் செய்து சம்பவத்தை விவரித்தார் மாவட்ட ஆட்சியர்.

மும்பை

ஆண்டு 2017 பாஜகவுக்குப் பெருவெற்றி தேடித் தந்த 2017 பிப்ரவரி மும்பை மாநகராட்சித் தேர்தலில் மும்பை ’பாண்டுப்’ பகுதி வாக்குச் சாவடி ஒன்றில் ஒரு காட்சி:  அன்றுதான் வாக்காளர்கள் உதய் ஷிண்டே – ஸ்வப்னாலி திருமணம். கல்யாணச் சடங்குகள் தொடங்கின. ஒரு கட்டத்தில் மணமக்கள் இருவரும் எழுந்து வாக்குச் சாவடி நோக்கி நடையைக் கட்டினார்கள். சில உறவினர்கள் ஆட்சேபித்தார்கள். வாக்களிக்கும் கடமைக்குரிய முக்கியத்துவத்தை உதய் எடுத்துக் கூறி சமாதானப்படுத்தினார். வாக்களித்தபின் திருமணச் சடங்குகள் தொடர்ந்தன.

சங்கரன்கோவில்

ஆண்டு 2012. சங்கரன்கோவில் இடைத்தேர்தல். மார்ச் 18 அன்று வாக்குப் பதிவு. சங்கரன்கோவில் ராமசாமியாபுரம் தெருவைச் சேர்ந்த மாடசாமிக்கும் சங்கரகோமதிக்கும் அன்று காலை சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் வைத்து திருமணம் நடந்தது. அவர்கள் இருவரும் மாலையும், கழுத்துமாக சங்கரன்கோவில் வணிக வைசிய நடுநிலை பள்ளி வாக்குச்சாவடிக்கு மணக்கோலத்தில் சென்று வாக்களித்தனர். வாக்களித்த பிறகு மணமக்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

வாக்களிக்கும் சாமானியரும் தேர்தல் நடத்தும் சாதாரண அரசு ஊழியர்களும் தேர்தலின் புனிதத்தை கட்டிக் காத்து வருவதை சங்கரன்கோவில், மும்பை ’பாண்டுப்’ மணமக்களும், தொட்டியம் ஆறுமுகமும் தென்கச்சி ஊர்மக்களும் தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டிவிட்டார்கள். தேர்தல் வந்தால் ஊர் இரண்டுபடுவதோ பொதுமேடை, கண்ணியம் இழப்பதோ பண்பாளர்களான பாமரர்களின் தேசமான பாரதத்திற்கே அவமானம்.