திகார் சிறை வேண்டாம் ப்ளீஸ் – சிதம்பரம் கெஞ்சல்

‘ஐ.என்.எக்ஸ். மீடியா’ ஊழல் வழக்கில் காங்.கைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் காவல் மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது ‘எனக்கு 74 வயதாகிறது. திகார் சிறைக்கு என்னை அனுப்பாதீர்கள். வேண்டுமானால் வீட்டுக் காவலில் வையுங்கள்’ என சிதம்பரம் சார்பில் கெஞ்சப்பட்டது.

மும்பையைச் சேர்ந்த ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் அன்னிய முதலீடு பெறுவதற்கு முந்தைய காங். ஆட்சியின் போது 2007ல் அனுமதி அளிக்கப்பட்டது. அப்போது நிதி அமைச்சராக இருந்த காங். மூத்த தலைவர் சிதம்பரத்தின் மகன் கார்த்தியின் தலையீட்டால் இந்த அனுமதி வழங்கப்பட்டதாக குற்றஞ் சாட்டப்பட்டது. முறைகேடாக இந்த அனுமதி வழங்கியதில் பல மோசடிகள் நடந்துள்ளதாக சிதம்பரம், கார்த்தி உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறை வழக்குகள் பதிவு செய்துள்ளன.

இந்த வழக்கில் சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை டில்லி உயர் நீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்தது. அதைத் தொடர்ந்து அவரை சி.பி.ஐ. கைது செய்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிதம்பரம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் முடிவு எடுக்கும் வரை அவருக்கு இடைக்கால பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

அவருக்கு இடைக்கால ஜாமின் அளியுங்கள் அல்லது வீட்டுக் காவலில் வையுங்கள். அவருக்கு 74 வயதாகிறது. அதனால் திகார் சிறைக்கு அனுப்ப வேண்டாம். சிதம்பரத்தை திகார் சிறைக்கு அனுப்ப கீழ் நீதிமன்றம் உத்தரவிட்டால் எங்களுடைய இந்த மனு செல்லாததாகி விடும்.

இதற்கு அமர்வு,  ஜாமின் கேட்டு விசாரணை நீதிமன்றத்தில்தான் மனு தாக்கல் செய்ய முடியும். அதில் நாங்கள் தலையிட முடியாது. திகார் சிறைக்கு அனுப்ப வேண்டாம் என்ற கோரிக்கையை அங்கு வையுங்கள். ஜாமின் மனு மீது கீழ் நீதிமன்றத்தில் உடனடியாக முடிவு எடுக்கப்படாவிட்டால் சிதம்பரத்தின் சி.பி.ஐ. காவல் மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டிக்கப்படும்.

அதைத் தொடர்ந்து செப்.5ம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் மதிய இடை வேளைக்குப் பிறகு இந்த அமர்வில் ஆஜரான சொலிசிட்டார் ஜெனரல் துஷார் மேத்தா “உச்ச நீதிமன்ற அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவால் கீழ் நீதிமன்றத்தால் முடிவு எடுக்க முடியாத சட்ட சிக்கல் ஏற்படும்” என்றார்.