தவறல்ல கொரானா

கோவையில் இளவரசன் என்பவர் கொரோனா இல்லாத தங்கள் குடும்பத்தை கொரோனா உள்ளதாக கூறி மாநகராட்சி அசிங்கப்படுத்தி விட்டதாக பேனர் வைத்துள்ளார். அவரின் தந்தை கொரோனாவால் இறந்ததால் வீட்டை தனிமைப்படுத்தியுள்ளனர் அதிகாரிகள்.

கொரோனா காரணமாக, ஊரடங்கை நீட்டிப்பது சாத்தியமில்லை. தேச பொருளாதாரம், குடும்ப பொருளாதாரம், மக்களின் இயல்பு வாழ்க்கை போன்ற பல காரணங்களை முன்னிட்டு அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது. பொது போக்குவரத்தும் தொடங்கியுள்ளது. ஆனால் கொரோனா முடியவில்லை, மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை என்பதுதான் எதார்த்தம். இந்த நிலையில் மக்கள் தனிமனித இடைவெளி உள்ளிட்ட அரசு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். பாரம்பரிய உணவு, கபசுர குடிநீர் போன்ற மருந்துகளுடன் நோயெதிர்ப்பு சக்தியை கூட்டுவது நல்லது. எனினும் கொரோனா நம்மை தாக்காது என்று சொல்வதற்கில்லை. முன்னெச்சரிக்கையையும் மீறி கொரோனா வந்தால், உரிய சிகிச்சை, தனிமைப் படுத்திக் கொள்ளுதல் என அரசு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். கொரோனா ஒரு தீரக்கூடிய நோய்தான். பயம் வேண்டாம், அலட்சியமும் வேண்டாம்.

கொரோனாவை காரணம் காட்டி ஒதுக்கிவைத்தல் என்பது தீண்டாமை கொடுமையை ஒத்தது. கொரோனா தவறான வியாதி போலவும், வெளியே சொன்னால் மானம் போய்விடும் என்றும் சிலர் நினைப்பது வருத்தத்திற்குரியது. உடனடியாக அந்த எண்ணம் களையப்பட வேண்டும். அரசும் கொரோனா பெயரில் நடக்கும் சில அத்துமீறல்களை உடனடியாக தடுக்க வேண்டும்.
கொரோனா வந்தால், ஆம் எனக்கு கொரோனா உள்ளது என தைரியமாக சொல்லுங்கள். வெட்கப்பட வேண்டாம்.