தமிழகத்தில் திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி, புதுக்கோட்டை நகராட்சிகள், மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 ஊராட்சிகளை ஒன்றிணைத்து புதுக்கோட்டை மாநகராட்சி; திருவண்ணாமலை நகராட்சி மற்றும் 18 ஊராட்சிகள், அடி அண்ணாமலையிலுள்ள பகுதிகள் ஆகியவற்றை ஒன்றிணைத்து திருவண்ணாமலை மாநகராட்சி;
நாமக்கல் நகராட்சி மற்றும் 12 ஊராட்சிகளை ஒன்றிணைத்து நாமக்கல் மாநகராட்சி; காரைக்குடி நகராட்சி மற்றும் இரண்டு பேரூராட்சிகள், ஐந்து ஊராட்சிகளை ஒன்றிணைத்து காரைக்குடி மாநகராட்சி ஆகியன உருவாக்கப்படுகின்றன. இதன் மூலம் புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை , காரைக்குடி ஆகிய நகராட்சிகள் மற்றும் அதன் அருகாமையில் அமைந்துள்ள உள்ளாட்சி பகுதிகளில் சாலைகள், பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேலும் சிறப்பாக செயல்படுத்த முடியும். இப்பகுதியில் வசிக்கும் மக்கள் பல்வேறு தேவைகளுக்காக இப்பகுதிகளுக்கு வந்து செல்வோர், சுற்றுலாப் பயணிகள், வணிக நிறுவனங்கள், தொழில்துறையினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் வாழ்க்கைத்தரம் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஏற்படவும் வாய்ப்பாக அமையும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்து உள்ளது.