தமிழகத்தில் பிள்ளையார் வழிபாடு: ஒரு பெரும் பாரத மரபின் இழை அறுபடா தொடர்ச்சி

ஆதியில் கணபதி பற்றிய குறிப்பு  ‘மானவ க்ருஹ்ய ஸூத்ர’த்தில் இடம் பெறுகிறது. பொது யுக முன் ஐந்திலிருந்து நான்காகக் காலம் கணிக்கப்பெறும் இந்த ஸூத்ரங்களில் கணபதியை வணங்காதவன் தகுதியுடையவனாயினும் அரசனாக மாட்டான், பெண்களுக்கு வரன் அமையாது என்று பல குறிப்புக்கள் தரப்பெற்றுள்ளன. இவை புராண காலத்து கணபதியின் இயல்புகளோடு ஒத்திசைந்துள்ளமை அறியத்தக்கது” முனைவர் சங்கர நாராயணன் தமது முகநூல் பதிவில் இவ்வாறு தெரிவிக்கிறார். இதை அடுத்து, சங்க இலக்கியத்தில் கணபதி வழிபாடு பற்றிய குறிப்புகளை தமது முகநூல் பதிவில் சுட்டிக்காட்டுகிறார் அரவிந்தன் நீலகண்டன்.

குறிப்பாக பெண்களுக்கு வரன் அமையாது என்பது சங்க இலக்கியத்தில் கன்னிமை அடைந்த பெண்கள் திருமணம் நடக்க கோயில் யானைக்கு பூஜைகள் செய்வது விவரிக்கப்பட்டுள்ளது.

கன்னிமை கனிந்த காலத்தார், நின்

கொடி ஏற்று வாரணம் கொள் கவழ மிச்சில்

மறு அற்ற மைந்தர் தோள் எய்தார்; மணந்தார்

முறுவல் தலையளி எய்தார் – நின் குன்றம்

குறுகிச் சிறப்பு உணாக்கால்   (பரிபாடல்)

திருப்பரங்குன்ற காட்சி இது. இங்கு முருகனின் கோயிலில் யானை உள்ளது. அந்த யானையை மகளிர் பூஜிக்கின்றனர். இந்த யானைப் பூஜையில் நடக்கும் செயல்கள் கூறப்பட்டுள்ளன. அதன் மத்தகத்தில் குங்குமம் சார்த்தப்படும். அதன் மேல் பூ நீர் சொரியப்படும். செவிகளில் வெண்சாமரம் வைக்கப்பட்டு அதன் மேல் பவள பொற்குடை எடுக்கப்படும். அது திருக்கோயிலை வலம் வரும். அந்த யானைக்கு சோற்றுக் கவளம் அளிக்கப்படும். அது உண்டு மீந்த பின்னர் பிரசாதமாக மகளிரால் உண்ணப்படும். இப்பூஜையை செய்யாவிடில் மகளிர்தம் காதலரையும் அவர் அன்பையும் அடையார் என கூறுகிறது பரிபாடல். இப்பாடலுக்கு அடுத்த பாடலில் வள்ளியம்மையார் பேசப்படுகிறார். ‘குறப்பிணாக் கொடியைக் கூடியோய்!’

பெண்கள் மட்டுமா கணபதியை காதல் கைகூட வணங்குகிறார்கள்? அந்த திருப்பரங்குன்ற முருகனே காதல் கைகூட கணபதியிடம் அல்லவா சரண் புகுந்தார்! அருணகிரிநாதர் நம் அனைவருக்கும் அதனை அழகு இசைத் தமிழில் அளித்துவிட்டார்.

அத்துயர் அது கொடு சுப்பிரமணி படும் அப்புனம் அதனிடை இபமாகி அக்குற மகளுடன் அச்சிறு முருகனை அக்கணம் மணம் அருள் பெருமாளே                       (திருப்புகழ்)

இங்கு இபமாகி குறமகளை முருகனுக்கு மணம் முடித்த விநாயகப் பெருமான் பரிபாடலில் கஜமாகவே இக வாழ்வை மகளிர் மனம் குளிர அளித்திருக்கிறார். பரிபாடலில் பூசனை செய்யப்படும் யானைக்கு செவிகளில் கவரி செய்யும் ஒப்பனையை அப்படியே கச்சியப்ப சிவாச்சாரிய சுவாமிகள் நம் விநாயகருக்கு அளிப்பதை காணலாம். தெளிவாக கணபதி வழிபாடு ஒரு பெரும் பாரத மரபின் தொடர்ச்சி. தமிழகத்திலும் அதன் தொடர்ச்சி விட்டுப் போகவே இல்லை.

மெய்ச்செவிக் கவரி தூங்க வேழமா முகங்கொண்டுற்ற

கச்சியின் விகட சக்கரக் கணபதிக் கன்பு செய்வாம்

கச்சியப்ப சிவாச்சாரியார் விகட சக்கரக் கணபதியை வேண்டுவதில் ஒரு அழகு இருக்கிறது. ‘திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்’ என ஆரம்பித்த கந்த புராண அரங்கேற்றம் நிகழ ஒரு தடையை ஏற்படுத்தி பின் அதை நீக்கியவரல்லவா பிள்ளையார்! ஆக, சங்க காலத்திலேயே விநாயகப் பெருமானின் வழிபாடு அதன் முன்னோடி வடிவில் தமிழகத்தில் இருந்திருப்பதையும் அதன் உட்பொருளும் சடங்கியல் நோக்கமும் மாறாமல் அது இன்றும் நம் பிள்ளையார் வழிபாட்டில் தொடர்வதையும் நம்மால் காண முடிகிறது.

 

*****************************

கோயில் யானைக்குக் குறிவைக்கிறார்கள்!

இப்போது ஒரு பிரச்சினை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ரொம்ப ஆன்மிக மணம் கமழ்வது போலவும் இலக்கியத் தரமாகவும் ஒரு பிரச்சாரம். யானைகளை கோயிலில் வைத்திருக்கக் கூடாதாம். உலகில் எனக்கு தெரிந்து வேறெந்த பண்பாடும் யானையை போல ஒரு பிரம்மாண்ட விலங்கை தன்னகப்படுத்தியதில்லை. தன்னை விட மிகப் பெரிதாக இருக்கும் சாது விலங்குகளை வெள்ளைக்காரர்கள் சென்ற இடங்களில் எல்லாம் கொன்று குவித்து வேட்டையாடியிருக்கிறார்களே ஒழிய அதை வீட்டு விலங்காகப் பேணும் தன்மையை நாம் கண்டதில்லை. அதை செய்த ஒரே பண்பாடு நம்முடையதுதான். யானையும் பாகனுமாக ஒரு ணூச்ணூஞு ண்ச்ஞிணூஞுஞீ ஞுஞிணிண்தூண்ணாஞுட் இங்கு பரிணமித்துள்ளது. இன்றைக்கு மதச்சார்பற்ற இந்தியாவின் கேடு கெட்ட அரசு இயந்திரம் ஊழல் பிடித்த நேருவிய அரசியல் அதிகாரிகள் இவர்களால் கோவில் யானைகள் பிச்சைக்கார விலங்குகளாக மாற்றப்பட்டும் அவை கோயில்களைச் சுற்றி ஏற்பட்டிருக்கும் ஆக்கிரமிப்பு நெரிசல்களில் நகரங்களின் கேவல பீடைகளால் நோயுற்று சித்திரவதைப்படுவதும் மிகவும் வருத்தமான அவமானகரமான உண்மை. ஆனால் அதை வைத்து இந்து பண்பாட்டுக்கே உரிய ஒரு சிறப்புத்தன்மை கொண்ட உயிரியல்-பண்பாட்டு அம்சம் இந்த கும்பல்களால் குறிவைத்து தாக்கப்படுகிறது. யானைக்கு வர்மப்புள்ளிகளைக் கூட கணித்த பண்பாடு கோயில் யானைகளை பராமரிக்க சரிவானத் தீர்வை அளிக்காதா? அதை செய்யாமல் நம் பண்பாட்டின் உயர் உச்சமொன்றை முழுமையாக ஒழித்துக் கட்டுவதில் காட்டும் கரிசனம் இருக்கிறதே… சரி அது வேறு கதை. யானைகளை கோயில்களில் வளர்ப்பது அவசியம். கோயில்கள் யானைகள் விரும்பி உறையும் சூழல் கொண்ட பசுமைத் தலங்களாகவும் நம் பாகன்கள் அவர்களின் பாரம்பரிய அறிவை நவீன அறிவியலுக்கு கொடையளித்து கொடை பெற்று ஒரு அறிவு சார் இறைமை-இயற்கை மானுடம் ஆகியவற்றுக்கான ஒரு உறவுப்பாலமாக ஆவதும் அவசியம்.

(முகநூலில் அரவிந்தன் நீலகண்டன்)