ஒன்றில் தொடங்கி ஒரு லட்சம் பிள்ளையார்கள்: தமிழ் மண்ணில் தலைமகன் உலா

விநாயகர் திருவிழா 300க்கு மேற்பட்ட நகரங்களில் மிகப் பெரிய  ஹிந்து எழுச்சி ஊர்வலங்களாக நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருத்தை வலியுறுத்தி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு மாட்டுப் பொங்கல் தமிழர் பண்பாடு, மாட்டை வெட்டுவது யார் பண்பாடு?” என்ற வாசகம் தமிழகத்தின் சிந்தனைக்கு விடப்பட்டுள்ளது.

விநாயகர் கோயில் இல்லாத ஊர் இல்லை. அவர் இல்லாத பூஜையோ வேள்வியோ இல்லை. இது பாரதத்தில் மட்டுமல்ல, உலகின் பல நாடுகளில் தோண்டும்போது அங்கும் விநாயகர் வழிபாடு அடையாளமாக விக்கிரகங்கள் இன்று கிடைத்து வருகின்றன.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அவ்வையார் பாலும் தெளிதேனும்” பாடலில் சங்கத் தமிழ் மூன்றும் தா” எனச் சொல்லியுள்ளார். விநாயகர் அகவலையும் பாடியுள்ளார். உண்மை இப்படி இருக்க விநாயகர் இறக்குமதி கடவுள் என்றெல்லாம் கருணாநிதி போன்றோர் வழக்கமான பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். திராவிடர் கழகமும் தனது சுயலாபத்திற்காக – விளம்பரத்திற்காக கடவுள் இல்லை – இல்லவே இல்லை என்ற பிரச்சாரத்தை துவக்கி வைத்தது. அதன் அடுத்த கட்டமாக ஈ.வே.ராமசாமி 1953ல் பிள்ளையார் சிலையை உடைக்கும் அந்த மாபாதகச் செயலை துவக்கி வைத்தார்.

அந்தக் கொடுமை பல இடங்களில் தொடர்ந்தது. நல்லவர்கள் சபையில் இருந்தது போல் பலர் இருந்தனர். சிலர் எதிர்ப்புகள் தெரிவித்தாலும் தடுக்க இயலவில்லை. பன்றியை பார்த்து ஒதுங்குவதைப்போல் ஒதுங்கி கொண்டார்கள். விளைவு விபரீதம் அதிகமாகி கொண்டே போனது. ஆட்சியும் அந்த சிந்தனை கொண்டோர்களிடையே கிடைத்தது. கள் குடித்த குரங்கு போல ஆனது திராவிடர் கழகம். அதன் உச்சகட்டமாக 1972ல் சேலத்தில் தி.க. மாநாடு நடந்தது.

சிலைகள் உடைப்பதும்செருப்பால் அடிப்பதுமாக எழுதவும் சொல்லவும் இயலாத கொச்சை கோஷமாக போட்டுக் கொண்டே சென்றனர். அடுத்த நாள் செய்தி பேப்பரில் வந்தது. பலர் மனம் குமுறியது. என்ன செய்ய என்பதுதான் யாருக்கும் புரியவில்லை. மூதறிஞர் ராஜாஜி கூட இனி தமிழ்நாட்டில் வாழத் தகுதியில்லை” என அறிக்கை தான் விட நேர்ந்தது. துணிச்சலாக இந்த கொடுமையை அன்றைய ஆசிரியர் சோ ‘துக்ளக்’கில் எழுதினார். ஆட்சியும் அதிகாரமும் அவர்கள் கையில் அத்தனை பிரதிகளும் ஆட்சியாளர்களால் கொளுத்தப்பட்டன.

உடனடியாக அதன் ஆங்கில மொழி பெயர்ப்பை ஸ்வயம்சேவகர் ஒருவர் Illustrated Weekly இதழுக்கு அனுப்பிவைத்தார். நாடெங்கும் இந்த செய்தி பரவியது. மீண்டும் துக்ளக்கில் வெளிவந்தது. நமது சேலம் ராமசாமிஜியும் வழக்குத் தொடுத்தார். ஹிந்துக்களின் மனம் துன்புறுத்தப்படுகிறது என. ஆனால் வழக்கை விசாரித்த நீதிபதியோ அன்று சேலத்தில் மக்கள் நடந்து செல்கின்றனர். கடைகள் திறந்து இருக்கிறது. பஸ்கள் ஓடுகிறது, தியேட்டர்களும் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. ஆகவே யாரும் நீங்கள் சொல்வது போல் மனம் துன்பப்படவில்லை என வழக்கை நிராகரித்தார். காரணம், நீதிபதியும் அவர்களே. இந்த சூழலில்தான் 1980ல் ஹிந்து முன்னணி துவங்கியது. எப்படி திலகர் சுதந்திரப் போராட்டத்தை விநாயகரை வைத்து பெரிதாக்கினாரோ தமிழகத்திலும் மீண்டும் தேசியத்தையும், தெய்வீகத்தையும் தட்டி எழுப்ப விநாயகரே விரைந்து அருள் கொடுத்தார்.

1983ம் ஆண்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள நாகப்ப தெருவில் முதன் முதலாக வீதியில் விநாயக சதுர்த்தி வழிபாடும் ஊர்வலமும் நடந்தது. அடுத்த ஆண்டே சென்னையின் பிற பகுதிகளிலும் மதுரையிலும் வழிபாடு துவங்கியது. சென்னை நங்கநல்லூரிலும் தாம்பரத்திலும் மூங்கிலால் செய்த விநாயகரை வீதிவீதியாய் கொண்டு சென்றனர். மக்கள் ஒன்றிணைந்தனர்.

விஸ்வரூப விநாயகர்

நாகப்பட்டினத்தில் மூங்கிலால் செய்யப்பட்ட 32 அடி” விஸ்வரூப விநாயகர் நாகூர் வரை 7 கி.மீ. ஊர்வலமாக சென்றது, ஹிந்து எழுச்சியுடன். அடுத்த ஆண்டு சென்னையிலும் 32 அடி பிள்ளையார் எழுந்தருளினார்.

******************

குடிசைதோறும் விநாயகர்

குடிசைப் பகுதிகளில் விநாயகர் வைக்க மக்கள் விருப்பம் தெரிவித்தனர். அதற்காக ‘3 அடி’ எழுச்சி விநாயகர் உருவாக்கப்பட்டது. 2 ஆண்டுகளில் சென்னையில் மட்டுமே பல ஆயிரம் பிள்ளையார்கள் வழிபாடு தொடங்கியது. எல்லா மாவட்டங்கள் தாண்டி இன்று எல்லா ஒன்றியங்களிலும் சென்று அடைந்துள்ளது. விநாயக சதுர்த்தி ஹிந்து எழுச்சி விழாவாக வளர்ச்சியும் எழுச்சியும் பெறுவதை பொறுக்க முடியாத சிலர் 1995ல் சென்னை மெரினா கடற்கரையில் நடந்த விழாவில் கலவரம் செய்தனர்.

1996ல் அதே திருவல்லிக்கேணியில் ‘ஐஸ் ஹவுஸ்’ மசூதி வழியாக போகக்கூடாது என முஸ்லிம்களால் செருப்பு வீசப்பட்டு கலவரம் செய்தனர்.

2000-ல் மீண்டும் அதே திருவல்லிக்கேணியில் கலவரம் செய்தனர். இப்படி பல தடைகள் தாண்டி இன்றும் விநாயகர் ஹிந்து எழுச்சியை ஏற்படுத்தி வருகிறார்.

இப்படிப்பட்ட விநாயகர் சதுர்த்தியில் ஒவ்வொரு நாளும் விதவிதமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. உதாரணமாக

– அன்னையர் தினம்

– குழந்தைகள் தினம்

– பெரியோர்கள் தினம்

– சமுதாய சமத்துவ தினம்

– இளைஞர்கள் தினம்

– பயங்கரவாத எதிர்ப்பு தினம்

– அகண்ட பாரத சபதமேற்பு தினம்

– ஹிந்து எழுச்சி தினம்…

இப்படி பலவிதமான நிகழ்ச்சிகள் கொண்டாடி வருகின்றனர்.

எந்த பிள்ளையாரை உடைத்து நாத்திகத்தை வளர்த்தார்களோ அதே பிள்ளையாரை வைத்து இன்று ஹிந்து முன்னணி ஹிந்து எழுச்சியை ஏற்படுத்தி வருகிறது.

1983ல் ஒரு பிள்ளையார் வைத்து துவக்கப்பட்டது. இன்று 1 லட்சம் விநாயகர் தமிழக வீதிகளில் பவனி வருகிறார்.