கூரேசர் என்ற கூரத்தாழ்வார் ஸ்ரீராமானுஜர் மீது மிகுந்த பக்தி உள்ளவர். அவருடைய வீடு காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள கிராமத்தில் இருந்தது. மிகப்பெரிய செல்வந்தர். ஏழைகளுக்கு உதவும் நல்ல பண்பு அவரிடம் இருந்தது. அவரது மனைவி ஆண்டாளும் கணவனுக்கேற்ற பண்புடையவள்.
குடும்ப வாழ்க்கை போதும் என்ற முடிவுக்கு வந்த கூரேசர் ராமானுஜரிடமே போய்ச் சேருவது என்று முடிவெடுத்தார். தனது சொத்தில் ஒரு பகுதியை மனைவிக்கு எழுதி வைத்துவிட்டு, மீதமுள்ளவற்றை தானம் வழங்கினார். தனக்கென்று எதையும் வைத்துக்கொள்ளாமல் காஞ்சியை நோக்கிப் புறப்பட்டார். அவருக்குத் தெரியாமல் அவர் மனைவியும் அவரைத் தொடர்ந்து சென்றாள். ஒரு காட்டைக் கடந்து செல்லும்பபோது மனைவி பின் தொடர்வதைக் கவனித்த கூரேசர் ”இவளே வாழ்க்கைத் துணைவி” என்ற சொல்லிற்கு தகுதி பெற்றவள் என்று மகிழ்ந்து அவளையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தார்.
நடந்து செல்லும்போது தனது மனைவியிடம் ஏதோ பயம் இருப்பதை உணர்ந்த கூரேசர் ”உன்னிடம் விலை மதிப்புள்ள பொருள் எதையாவது வைத்திருக்கிறயா?’’ என்று கேட்டார். ‘‘நீங்கள் வழக்கமாக சாப்பிடுகிற பொன் தட்டு மட்டும் கொண்டு வந்துள்ளேன்’’ என்றாள்.
”நமக்கு அடுத்தவேளை உணவு கிடைக்குமா என்றே தெரியாத நிலையில் பொன் தட்டு எதற்கு என்று சொல்லிவிட்டு அதை வாங்கி தூர எறிந்தார். ‘‘அதோ அந்தத் தட்டுடன் உன் பயமும் தூர எறியப்பட்டது’’ என்றார் கூரேசர். கூரேசரும் ஆண்டாளும் காஞ்சியை அடைந்து, வரதராஜப் பெருமாளை தரிசித்துவிட்டு ராமானுஜரை சென்றடைந்தனர்.
கூரேசரை ”பொன் தட்டில் பறித்தெறிந்த புகழுடையோன் வாழியே” என்று … பெரியோர்கள் புகழ்ந்தனர்.