டில்லி தொழிற்சாலையில் பயங்கர தீ – 43 தொழிலாளர்கள் உடல் கருகி பலி

தலைநகர் டில்லியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 43 தொழிலாளர்கள் உடல் கருகியும் மூச்சுத் திணறியும் பரிதாபமாக பலியாகினர். விபத்து குறித்து விசாரணை நடத்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

டில்லியில், ராணி ஜான்சி சாலையில் அனாஜ் மண்டி என்ற தொழிற்பேட்டை பகுதி உள்ளது. இங்கு ஏராளமான சிறு தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. மிக குறுகிய சந்தில் அமைந்துள்ள இந்த பகுதியில் உள்ள நான்கு மாடி கட்டடத்திலும் சில தொழிற்சாலைகள் செயல்பட்டு வந்தன. மூன்றாவது மாடியில் ‘கோட்’ மற்றும் பைகள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வந்தது. இந்த தொழிற்சாலை உரிய அனுமதியின்றி இயங்கி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த கட்டடத்தின் மூன்றாவது மாடியில் உள்ள தொழிற்சாலையில் நேற்று அதிகாலை 5:20க்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென இரண்டாவது மாடியில் உள்ள தொழிற்சாலைக்கும் பரவியது. அதிகாலை நேரம் என்பதால் பெரும்பாலான தொழிலாளர்கள் அயர்ந்து துாங்கிக் கொண்டிருந்தனர். மூன்றாவது மாடியில் உள்ள ஜன்னல்களில் ஒரு ஜன்னல் மட்டுமே திறந்திருந்தது.

இதனால் அந்த மாடி முழுவதும் ஒரே புகை மண்டலமாக காணப்பட்டது. தொழிலாளர்களால் வேகமாக வெளியேறமுடிய வில்லை. சிலர் தீயில் கருகியும் மற்றவர்கள் மூச்சுத் திணறியும் பலியாகினர். மிக குறுகிய சந்தில் தொழிற்சாலை இருந்ததால் அதிகமான தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வர முடியவில்லை. பொது மக்களும் திரண்டு நின்றதால் மீட்பு பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறினர்.

ஒரு வழியாக 23 தொழிலாளர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 43 பேர் தீ விபத்தில் பலியாகினர். இவர்களில் பெரும் பாலானோர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பலியானதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். மீட்பு பணியின்போது தீயணைப்பு வீரர்கள் இருவரும் காயம் அடைந்தனர். விபத்தில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் வெளி மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் என தெரியவந்துள்ளது.

மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து நடந்திருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்து குறித்து அதிர்ச்சி தெரிவித்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இது குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பிரதமர் மோடி ”மிக மோசமான விபத்து இது” என தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் அளிக்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்தார். காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்டோரும் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

தீ விபத்து ஏற்பட்ட நான்கு மாடி கட்டடத்தின் உரிமையாளர் ரோஹன் நேற்று கைது செய்யப்பட்டார். இறப்புக்கு காரணமாக இருத்தல் கவனக்குறைவாக செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கட்டடத்தின் மேலாளர் புர்கான் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். தடயவியல் துறையைச் சேர்ந்த நான்கு பேர் அடங்கிய குழுவினர் விபத்து நடந்த இடத்தில் நேற்று ஆய்வில் ஈடுபட்டனர். அவர்கள் கூறுகையில் ‘கட்டடத்தின் பல பகுதிகளில் அனல் கொதிக்கிறது. எங்களால் அங்கு செல்ல முடியவில்லை. தீ முழுமையாக அணைக்கப்பட்ட பின்பே மீண்டும் இங்கு ஆய்வு நடத்த முடியும்’ என்றனர்.

இதற்கிடையே தீ விபத்துக்கு பொறுப்பேற்பது யார் என்ற விஷயத்தில் அரசியல் கட்சிகளுக்கு இடையே கடும் மோதல் எழுந்துள்ளது. ‘டில்லியில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி அரசின் கவனக்குறைவு காரணமாகவே இந்த தீ விபத்து நடந்துள்ளது. முதல்வர் கெஜ்ரிவால் தான் இந்த விபத்துக்கு பொறுப்பேற்க வேண்டும்’ என பா.ஜ. மற்றும் காங்.கட்சியினர் கூறுகின்றனர். அதேநேரத்தில் ‘ஒரு மிகப் பெரிய சோகமான சம்பவம் நடந்துள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தையும் அரசியலாக்குவது வேதனையாக உள்ளது’ என ஆம் ஆத்மி கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

11 பேரை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்

தீ விபத்து நடந்த கட்டடத்துக்குள் புகை மண்டலமாக காட்சி அளித்ததாலும் தீ மளமளவென எரிந்ததாலும் தீயணைப்பு வீரர்களால் உள்ளே செல்ல முடியவில்லை. ஆனாலும் ராஜேஷ் சுக்லா என்ற தீயணைப்பு வீரர் மிகவும் துணிச்சலாக உயிரை பொருட்படுத்தாது கட்டடத்துக்குள் சென்று 11 பேரை காப்பாற்றி அழைத்து வந்தார். இதில் அவரது கால் மற்றும் கைகளில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை டில்லி மாநில உள்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் நேரில் சென்று நலம் விசாரித்ததுடன் பாராட்டும் தெரிவித்தார்.