”திமு. க .., ஆட்சியை, ‘டாஸ்மாக்’ மாடல் ஆட்சி என்று கூறலாம்,” என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேசினார். பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, நேற்று திருச்சி மாவட்டம், லால்குடி மற்றும் மண்ணச்சநல்லுார் சட்டசபை தொகுதியில், ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை மேற்கொண்ட போது பேசியதாவது: திருச்சியில் தி.மு.க., நிர்வாகி சிமென்ட் தொழிற்சாலையில் மிரட்டி மாமூல் வாங்குகிறார். கல்லக்குடி என்றாலே ஞாபகத்தில் வருபவர் கருணாநிதி. ரயில் வராத பாதையில் தலையை வைத்தவர்.
‘தி.மு.க.,வினர் கல்லக்குடி பெயர் மாற்றத்திற்காக போராடவில்லை. டால்மியாபுரம் பெயர் மாற்றம் செய்ய போராட்டத்தில் ஈடுபட்ட கருணாநிதியை, போலீசார் அடிக்கவில்லை; தன்னைத்தான் அடித்ததாக கண்ணதாசன் கூறியுள்ளார். எனவே, கல்லக்குடி கொண்ட கருணாநிதி என கூறுவதை விட, கல்லக்குடி கண்ட கண்ணதாசன் என்றே கூற வேண்டும். தமிழகத்தின், 35 அமைச்சர்களில், பாதி பேர் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளனர். வாக்குறுதி அளித்தபடி தி.மு.க., 1.50 லட்சம் பேருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கியிருக்க வேண்டும். இதுநாள் வரை வழங்கவில்லை. இது திராவிட மாடல் ஆட்சி இல்லை; டாஸ்மாக் மாடல் ஆட்சி என்று கூறலாம். தமிழகத்தில் பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், டாஸ்மாக் கடைகள் மூடப்படும். அவற்றுக்கு பதிலாக கள்ளுக்கடைகள் திறக்கப்படும். இவ்வாறு அண்ணாமலை பேசினார்