ஜாலியன் வாலாபாக் அநீதிக்குப் பழிக்குப் பழி

ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குக் காரணமான வெள்ளையர்களைப் பழிக்குப் பழி வாங்க ஒரு இளைஞன் சபதமேற்றான். சபதத்தை நிறைவேற்ற பல ஆண்டுகள் தொடர்ந்து போராடினான். எத்தனை ஆண்டுகள்? 21 ஆண்டுகள்! ஒரு தேசத்திற்கு இழைக்கப்பட்ட அவமானத்தைத் துடைக்க ஒரு தனிமனிதன் – இருபது வயதே ஆன இளைஞன் உதம்சிங் செய்த சாதனையின் வரலாறு இதோ…

உதம்சிங்

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவன். சிறு வயதி லேயே பெற்றோரை இழந்தவன். ஒரு அனாதை விடுதியில் தங்கி படித்துக் கொண்டிருந்தான். ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த அன்று இரவு மாணவர்கள் சிலரை அழைத்துக் கொண்டு இருள் சூழ்ந்த அந்த மைதானத்திற்குள் கையில் லாந்தர் விளக்கோடு புகுந்தான். எங்கு பார்த்தாலும் பிணக்குவியல்கள். குண்டடிப்பட்டு கை கால் இழந்து மரண ஓலமிட்ட அந்த மைதானமே சுடுகாடாய்க் காட்சியளித்தது. சிலர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். உதம்சிங் அவர்களுக்கு தண்ணீர் கொண்டு போய்க் கொடுத்தான். அவன் கொடுத்த ஒரு வாய்த் தண்ணீர் குடித்து விட்டு உயிர் விட்டனர் சிலர். சிலர் பிழைத்துக் கொண்டனர். அவர்களைக் காப்பாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டார் உதம் சிங். இந்தப் படுகொலைக்குக் காரணமான ஜெனரல் ஹாரி டயரையும் அவனைத் தூண்டிவிட்ட கவர்னர் சர் மைக்கேல் ஓ டயரையும் கொன்று பழிக்குப் பழி தீர்ப்பேன் என்று உதம்சிங் சபதமெடுத்தான். அப்போது அவனுக்கு வயது இருபது.

ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த அதே ஆண்டு ஜெனரல் ஹாரி டயரும், லெப்டினண்ட் கவர்னர் சர் மைக்கேல் ஓ டயரும் இங்கிலாந்துக்குச் சென்றனர். இவர்களுக்குப் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் வக்காலத்து வாங்கிய மந்திரி லார்டு ஷெட்லாண்ட் இருந்ததும் லண்டன் நகரில்தான். இந்த மூவரையும் பழிதீர்க்க உதம்சிங் லண்டன் செல்ல திட்டமிட்டான். இந்தியாவிலிருந்து லண்டன் செல்வது என்பது அவ்வளவு சுலபமானதா? உதம் சிங்கிடம் சல்லிக்காசு கிடையாது. ஆனால் எப்படியாவது இந்தியாவை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று இரவு பகலாகத் திட்டமிட்டான். ஒருவரின் உதவியால் தென்னாப்பிரிக்கா செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அங்கிருந்து அமெரிக்கா சென்றான். அங்கு இருந்த இந்திய புரட்சி வீரர்களின் உதவியுடன் லண்டன் சென்றான்.

இன்ஜீனியரிங் படிக்க வந்த மாணவன் என்று தன்னைக் கூறிக்கொண்டு லண்டன் மாநகரில் அந்த மூவரையும் தேடி அலைந்தான். வயிற்றுப் பிழைப்புக்கு ஏதேதோ வேலைகளைச் செய்து வந்தான். இப்படி ஐந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்திய புரட்சி வீரர்களுடன் நல்ல தொடர்பு இருந்தது.

அப்போது ஆங்கிலேயனை எதிர்த்து புரட்சி இயக்கம் தீவிரமாகப் போராடிக்கொண்டிருந்தது. உதம் சிங்கை உடனே இந்தியா புறப்பட்டு வரும்படி பகத்சிங் கடிதம் எழுதினார். அதனால் புரட்சி இயக்க நண்பர்கள் சிலரோடு இந்தியா திரும்பினான். இந்தியா திரும்பிய சில நாட் களிலேயே லாகூரில் உதம் சிங்கை சந்தேகத்தின் பேரில் சோதனையிட்ட போலீசார் அவனிடம் அமெரிக்க நாட்டு துப்பாக்கி இருப்பதைக் கண்டுபிடித்து அவன் மீது வழக்கு தொடர்ந்து சிறையில் அடைத்தனர். நான்கு ஆண்டுகாலம் சிறைவாசம். சிறையில் இருந்தபோது புரட்சி வீரர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. விடுதலை ஆனபிறகு போலீசாரின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு ஜெர்மனிக்குத் தப்பிச் சென்றான்.

உதம்சிங் ஜெர்மனியிலிருந்து லண்டன் சென்றான். இங்கு கார் மெக்கானிக் கடையில் வேலைசெய்து கொண்டு அந்த மூவரின் இருப்பிடங்களைத் தேடி அலைந்தான். மூவரின் இருப்பிடங்களையும் கண்டுபிடித்துவிட்டான். மூவரையும் ஒரே நாளில் சுட்டுக்கொல்வது என்பது அவ்வளவு சுலபமில்லை. இதற்காக ஏழு ஆண்டுகள் பொறுமையோடு காத்திருந்தான். இதற்கிடையில் எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்துவிட்டது. உதம் சிங் கொல்ல வேண்டிய மூவர்களில் ஒருவரான ஜெனரல் ஹாரி டயர் பக்கவாத நோயால் இறந்துவிட்டான். இதை அறிந்ததும் உதம்சிங் மிகவும் வருந்தினான். மீதம் இருக்கிற இருவரையும் விரைவில் கொன்றுவிட வேண்டும் என்று துடியாய்த் துடித்தான். அவர்கள் இருவரையும் காலை முதல் இரவு வரை நோட்டமிட்டான். இறைவன் உதம்சிங்கிற்கு ஒரு நல்ல வாய்ப்பைக் கொடுத்தான்.

லண்டன் காக்ஸ்டன் ஹாலில் ஒரு கூட்டம் நடைபெற இருப்பதாகவும், அதில் பஞ்சாப் கவர்னர் சர் மைக்கேல் ஓ டயரும் லார்டு ஷெட்லாண்டும், கலந்துகொள்வதாகவும் செய்தி பத்திரிகைகளில் செய்தி வெளியாகியது. இதைப் பார்த்த உதம்சிங் மகிழ்ச்சியடைந்தான். இதே காக்ஸ்டன் ஹாலில் தான் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வங்கப்பிரிவினைக்குக் காரணமான சர் கர்ஸன் வில்லி என்னும் ஆங்கிலேய அதிகாரியை மதன்லால் திங்கரா எனும் புரட்சி வீரன் சுட்டுக்கொன்றான்.

திட்டமிட்டபடி அந்தக் கூட்டத்தில் உதம்சிங் கலந்து கொண்டான். மைக்கேல் ஓ டயர் பேசி முடித்ததும் தனது இருக்கைக்குத் திரும்பினார். இதுதான் தக்க தருணம் என்று கருதிய உதம்சிங் மேடை அருகே சென்று துப்பாக்கியை எடுத்து மைக்கேல் டயரை நோக்கி ஆறுமுறை சுட்டான். அடுத்து லார்டு ஷெட்லாண்டை நோக்கிச் சுட்டான். மைக்கேல் ஓ டயர் அந்த இடத்திலேயே பிணமானான். மேடையில் இருந்த அனைவரையும் சகட்டு மேனிக்குச் சுட்டுத் தள்ளினான் உதம்சிங். எல்லாம் இரண்டொரு நிமிடங்களுக்குள் முடிந்து விட்டது. கூட்டம் கலைந்து ஓடியது. ஆனால் உதம் சிங் அதே இடத்தில் அப்படியே நின்றான். உதம் சிங் நினைத்திருந்தால் தப்பி ஓடியிருக்கலாம். ஆனால் அவன் அப்படி ஓடவில்லை. லார்டு ஷெட்லாண்டு பலத்த காயத்தோடு தப்பினார். உதம்சிங் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

தூக்குத் தண்டனை அன்று மணமேடைக்குச் செல்லும் மணமகன் போல் சிரித்த முகத்தோடு தூக்கு கயிற்றை தானே எடுத்து கழுத்தில் மாட்டிக் கொண்டான்.

தான் எடுத்த விரதத்தை 21 ஆண்டுகள் முயற்சிக்குப் பின்னர் நிறைவேற்றியது வரலாறு.

இந்திரா பிரதமராக இருந்தபோது உதம்சிங்கின் அஸ்தி 1971ம் ஆண்டு லண்டனிலிருந்து டெல்லிக்கு கொண்டு வரப்பட்டது. பஞ்சாப் மாநிலத்தில் பஞ்ச நதிகளில் அஸ்தி கரைக்கப் பட்டது.