முடிவைத் தானேந்தல்

“பிகார் – உத்தர பிரதேச  எல்லையில் அமைந்துள்ள கஹமர் என்ற கிராமம் சுமார் எட்டு சதுர மைல் பரப்பளவு கொண்டது. உ.பியின் காஜிபுர் மாவட்டத்தில் உள்ள கஹமர் ஆசியா கண்டத்தின் பெரிய கிராமம். அது மட்டுமல்ல. ராணுவ வீரர்களின் கிராமம் என்ற புகழும் அதற்கு உண்டு. இந்த கிராமத்தின் சுமார் பத்தாயிரம் பேர் தற்போது நமது பாரதத்தின் ராணுவத்தில் சிப்பாய் முதல் கர்னல் வரை வெவ்வேறு பதவிகளில் சேவை செய்து வருகின்றனர். இதில் ஐயாயிரத்திற்கு மேற்பட்ட முன்னாள் ராணுவ வீரர்களும் அடங்குவர். கிராமத்தின் ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒரு நபர் ராணுவப் பணியில்!

சுமார் எண்பதாயிரம் மக்கள் தொகை கொண்ட இந்த கிராமம் 22 பட்டிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பட்டியும் ஒரு புகழ்பெற்ற நபரின் பேரில் அமைந்துள்ளது. இவர்களது வாழ்வு ராணுவத்தோடு பின்னிப் பிணைந்துள்ளது என்று கூறினாலும் அது மிகையாகாது. இந்தக் கிராமத்தின் மாதர்களும் அது போராயிருந்தாலும், இயற்கை சீற்ற பேரழிவாக இருந்தாலும், அதில் பங்கு கொள்ள மிகுந்த உற்சாகத்தோடு குடும்பத்தின் ஆண் மகன்களை அனுப்பி வைத்து உதவி செய்கின்றனர்.

இந்த கிராமத்தில் வெவ்வேறு பிரிவினரை சேர்ந்த மக்கள் இருந்தபோதிலும், இவர்களில் ராஜபுத் வம்சாவளியினர் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். அவர்கள் தொழில் செய்து வருமானம் ஈட்டுகின்றனர். இந்த கிராமத்து ராணுவ வீரர்கள் இரண்டாவது உலகப் போரிலும் 1965, 1971 ஆண்டுகளில் நடந்த போர்களிலும், கார்கில் போரிலும், போர்முனை கண்டவர்கள். முதல், இரண்டாவது உலகப் போர்களில் ஆங்கிலேயர்களின் படைகளில் கஹமர் கிராமத்து 228 ராணுவ வீரர்கள் பங்கேற்றனர். அதில் 21 பேர் வீரமரணம் அடைந்தனர். அவர்களது நினைவாக ஊரின் நுழைவாயிலில் ஒரு கல்வெட்டு உள்ளது.

இந்த கிராமத்தின் முன்னாள் வீரர்கள், ‘முன்னாள் ராணுவ வீரர்களின் தொண்டு நிறுவனம்’ ஒன்றை ஏற்படுத்தினார்கள். அந்த தொண்டு நிறுவனத்தின் அதிகாரி சிவானந்த். பத்து ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட இந்த நிறுவனத்திற்கு சுமார் 3,000 அங்கத்தினர்கள் உள்ளனர். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அன்றும் இந்த குழுவின் கூட்டம் கார்யாலத்தில் கூடுகிறது. இந்த சந்திப்பின்போது கிராமத்தின் ராணுவ வீரர்களின் வெவ்வேறு பிரச்சினைகள் பற்றியும் விவாதிக்கப்படுகிறது. கிராமத்தின் பிள்ளைகளுக்கு ராணுவத்தில் சேர்வதற்கு தேவையான உதவி அளிக்கப்படுகிறது. இவ்வூர் வாலிபர்கள் கிராமத்திலிருந்து சிறிது தூரத்தில், கங்கை நதியின் கரையில் உள்ள மாடியா சௌக் சென்று காலையிலும் மாலையிலும் ராணுவத்தில் சேருவதற்கான பயிற்சியில் ஈடுபடுவதை காணலாம். ராணுவத்தில் ஆள்சேர்ப்பு முகாம் இந்தக் கிராமத்திலேயே நடத்தப்பட்டு வந்தது. ஆனால் 1986 ல் இது நிறுத்தப்பட்டது. இதனால் இவ்வூர் இளைஞர்கள் லக்னோ, ரூர்க்கி, சிகந்தராபாத் ஆகிய இடங்களுக்கு செல்கிறார்கள்.

இது ஒரு கிராமமாக இருந்தாலும் ஒரு நகருக்கு வேண்டிய அத்தனை வசதிகளையும் கொண்டதாக உள்ளது. இந்த கிராமத்தில் தொலைதொடர்பு நிறுவனம், இரண்டு இளநிலை கல்லூரிகள், இரண்டு இடைநிலை கல்லூரிகள் இரண்டு உயர்நிலைப் பள்ளிகள், இரண்டு நடுத்தர பள்ளிகள், ஐந்து ஆரம்பப் பள்ளிகள், சுகாதார மையம் எல்லாம் உள்ளது.

இங்குள்ள ரயில் நிலையத்தில் 11 ரயில்கள் நிற்கின்றன. ராணுவத்தினர் வந்து போய்க் கொண்டு இருப்பார்கள். ஆனால் பண்டிகை காலங்களில் ராணுவ வீரர்கள் வந்திறங்கும் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும். ரயில் நிலையமே ராணுவ முகாம் போல மாறி விடும்!