ஆர்.எஸ்.எஸ் எனப்படும் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் தலைவர் மோகன் பாகவத், நேற்று முதல் வரும் அக்டோபர் 3 வரை ஜம்முவில் நான்கு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டப்பிரிவு 370 மற்றும் 35 ஏ பிரிவுகள் நீக்கப்பட்ட பிறகு, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் செல்வது இதுவே முதல்முறை. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஜம்மு காஷ்மீர் பிரிவுடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் அவர், அக்டோபர் 2ம் தேதி ஜம்மு பல்கலைக் கழகத்தின் ஜெனரல் ஜோராவர் சிங் ஆடிட்டோரியத்தில் ஒரு கருத்தரங்கில் உரையாற்றுகிறார். மேலும், ஜம்முவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பில் நடைபெறும் சேவைப்பணிகள், கல்வி, பொது விழிப்புணர்வு, சுகாதாரம், கிராமப்புற வளர்ச்சி, சூழலியல், நீர் பாதுகாப்பு, சமூக சமத்துவம் போன்றவைகள் குறித்தும் ஆய்வு செய்கிறார். அக்டோபர் 3 அன்று, ஜம்மு காஷ்மீர் முழுவதும் உள்ள ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாடுதல், அங்குள்ள பிரச்சாரகர்கள், முக்கிய பிரமுகர்களுடன் கலந்துரையாடல் போன்றவற்றிலும் கலந்துகொள்கிறார்.