உலக மின் ஆற்றல் தொடர்பான விவரங்களைச் சேகரித்து வரும் எம்பர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2015-ல் சூரிய சக்தி உற்பத்தியாளர் வரிசையில் இந்தியா 9-வது இடத்தில் இருந்தது. இந்நிலையில் 2023-ல் இந்தியா சூரிய ஒளி சக்தி உற்பத்தியில் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இதன்மூலம் 4-வது இடத்தில் இருந்த ஜப்பானை இந்தியா பின்னுக்குத் தள்ளியுள்ளது. தற்போது இந்தியாவானது அதிக அளவு அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி அபரிமிதமான சூரிய ஒளி மின் ஆற்றலை உற்பத்தி செய்து வருகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உலக மின்சார மதிப்பீட்டு அறிக்கையானது, அண்மையில் எம்பர் அமைப்பு சார்பில் வெளியாகியுள்ளது. அதில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. உலகில் உருவாகும் மொத்த மின்சார உற்பத்தியில் சூரிய ஒளி மின்சாரத்தின் பங்கு 5.5 சதவீதமாகும். உலகம் முழுவதும் தயாரிக்கப்படும் சூரிய ஒளி மின்சாரத்தில் இந்தியாவின் பங்கு 5.8 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. 2023-ல் இந்தியா 18 டெராவாட் மணி நேரம் (டிடபிள்யூஎச்) சூரிய ஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளது. இந்த வரிசையில் முதலிடத்தில் சீனா (156 டிடபிள்யூஎச்), 2-வது இடத்தில் அமெரிக்கா (33 டிடபிள்யூஎச்), பிரேசில் (22 டிடபிள்யூஎச்) ஆகிய நாடுகள் உள்ளன.
இந்த வரிசையில் இருந்த ஜப்பான் நாட்டைத்தான் இந்தியா பின்னுக்குத் தள்ளியுள்ளது.
ஆண்டுதோறும் உலக சூரிய ஒளி மின் உற்பத்தியில் அமெரிக்கா, சீனா, பிரேசில், இந்தியா ஆகிய 4 நாடுகள் 75 சதவீதத்தை உற்பத்தி செய்கின்றன. இதுகுறித்து எம்பர் அமைப்பின் ஆசியா திட்ட இயக்குநர் ஆதித்யா லொல்லா கூறியதாவது: புதுப்பிக்கத்தக்க மின்சாரத்துறைதான் உலகின் எதிர்கால மின்சார சக்தியின் ஆதாரமாக இருக்கும் என்று முன்பே கணிக்கப்பட்டது. அது தற்போது உண்மையாகி வருகிறது. குறிப்பாக சூரிய ஒளிமின்சாரத் துறையானது எதிர்பாராத வகையில் அதிக வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது என்றார்.