அயோத்தி ராமர் கோவில் பிராண பிரதிஷ்டைக்கு முந்தைய தினம், பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு கடிதம் எழுதினார்.
அதற்கு, பிரதமர் மோடி தன் பதில் கடிதத்தை அனுப்பி வைத்தார். அதில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது:என் வாழ்வின் மறக்க முடியாத தருணங்களை பார்த்து, அயோத்தியில் இருந்து திரும்பியதும் இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். என்னைவிட்டு எப்போதும் பிரிக்க முடியாத அயோத்தியை இதயத்தில் சுமந்தபடி இந்த கடிதத்தை எழுதுகிறேன்.பல நுாற்றாண்டு காத்திருப்பு முடிவுக்கு வர ஒரு ஊடகமாக செயல்பட்டது உணர்ச்சிகரமான தருணமாக இருந்தது. அதை என் பாக்கியமாக கருதுகிறேன்.நீங்கள் கூறியதை போல, ராமரை நாம் வழிபடுவது மட்டுமின்றி, வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் குறிப்பாக சமூக பார்வையில் அவரிடம் இருந்து உத்வேகம் பெறுகிறோம்.
இந்த பிரமாண்ட ராமர் கோவில், வளர்ச்சி மற்றும் வெற்றிக்கான புதிய முன்னுதாரணங்களை உருவாக்க தொடர்ந்து நம்மை ஊக்குவிக்கும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.