சேவைப் பணியுடன் சமுதாயப் பணியும் செய்த சிவசங்கரன் ஜி

ஆர்.எஸ்.எஸ் சாமான்யர்களையும் அசாதாரமானவர்களாக மாற்றுகிறது. அந்தவகையில் சாதாரண குடும்பத்து நபர் சங்க தொடர்பின் மூலம் சமூகப் பணியும் செய்து, தனது குடும்பத்தையும் திறம்பட நடத்தி சங்க கார்யகர்த்தர்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட்ட, சிவசங்கரன் ஜியைப் பற்றி இந்த இதழில் அறிவோம்…

வேலூர் மாவட்டத்தில் உள்ள சத்துவாச்சாரியில், 1952 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி சுப்பிரமணி – கௌரி அம்மாளுக்கு மகனாக பிறந்தார், சிவசங்கரன் ஜி. அவருடன் பிறந்தவர்கள் மூன்று அண்ணன், ஒரு தம்பி மற்றும் இரண்டு தங்கைகள்.

பதினோராம் வகுப்பு வரை சத்துவாச்சாரியில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் படித்த பின்பு, பி.யூ.சி படிப்பை மேல்விஷாரத்தில் உள்ள அப்துல் ஹக்கிம் கல்லூரியில் படித்தார். படித்து முடித்த பின்னர், 1971 -− 1974 வரையில், திருமகள் ஆலைக் கல்லூரியில் கணித வகுப்பில் இளங்கலைப் படிப்பில் தேர்ச்சி பெற்றார். அதற்குப் பிறகு, வரலாறு படத்தில் முதுநிலை பட்டம், டிப்ளமோ படிப்பை முடித்தார்.

1977 ஆம் ஆண்டு, மிசா விலக்கப்பட்ட பிறகு, சங்கத்தின் சார்பில் விஜயதசமி விழா வெகு விமரிசையாக, வேலூர் டவுன் ஹாலில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் உரையாற்ற பேராசிரியர் ராஜேந்திரசிங் ஜி வந்திருந்தார்.

அவரது பேச்சை தமிழில் மொழி மாற்றம் செய்தார், இராம கோபாலன் ஜி. சிறப்புரையை கேட்டு உற்சாகமடைந்து, சங்கத்தில் சேர பெயர் கொடுத்து வந்தார்கள் – ஏழை முனுசாமி ஜி, பாஸ்கர் ஜி மற்றும் சிவசங்கரன் ஜி. அப்போது வேலூர் மாநகர பிரச்சாரக்காக இருந்த வீரபாகு ஜி, அனைவரையும் தொடர்புக் கொண்டார். சிவசங்கரன் ஜிக்கு, இந்து முன்னணியில் வேலூர் மாவட்டச் செயலாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டது.

ஆற்காடு, வாலாஜா தாலுகாவின் இந்து முன்னணி பொறுப்பாளராக வேலை செய்து வந்தார். திருப்பராய்த்துறையில் நடந்த இந்து முன்னணி பயிற்சி முகாமிற்கு, சில பேர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தனர். அதில் பயிற்சி பெற, சிவசங்கரன் ஜியும் கலந்து கொண்டார். முதலாம் ஆண்டு சங்கப் பயிற்சி முகாமை, 1987 ஆம் ஆண்டு கரூரில் முடித்தார்.

இந்து முன்னணி சார்பில் பல தெருமுனைக் கூட்டங்களை நடத்தினார். புகழ் பெற்ற வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் மீண்டும் வழிபாடு தொடங்க முக்கியப் பங்கு வகித்தார். பல தடைகளைத் தாண்டி, கோயில் புனரமைக்கும் பணியில் 13 பேரில் ஒருவராக, செயற்கரிய செயல்களைச் செய்து முடிக்க களத்தில் நின்றார். பளு தூக்கும் வீரரான சிவசங்கரன் ஜி, சிவலிங்கத்தின் அருகில் மூலஸ்தானத்தில் கடைசி வரை நின்று, அந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு வெற்றி பெற முழுவீச்சில் செயல்பட்டார்.

சங்க மூத்த அதிகாரிகளின் வழிகாட்டுதலில், பல இன்னல்களைத் தாண்டி, ஜலகண்டேஸ்வரர் சுவாமியை மக்கள் தரிசனம் செய்தனர். அந்த சம்பவம், அகில பாரத அளவில் பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், அயோத்தியில் கரசேவைக்கு வித்திட்டது, ராமர் ஆலயம் அமைய முக்கியப் பங்கு வகித்தது. டாக்டர் ஜி, குருஜி நூற்றாண்டு விழாக்களில் கலந்து கொண்டு, சங்கப் பணியை மேற்கொண்டார்.

ஷெஃப்ளின் தொழுநோய் ஆராய்ச்சி மற்றும் மருத்துவமனையில் சமூக அலுவலராக பணிபுரிந்தார். இந்த சம்பவத்தின் மூலம், சிவசங்கரன் ஜிக்கு வேலை செய்யும் இடத்தில், நிறைய பிரச்சினைகள் ஏற்பட்டது. எனினும் மனம் தளராமல், தனது சமூக சேவைப் பணியை தொடர்ந்து செய்து வந்தார்.

மக்கள் நலன் பெறும் வகையில், பல சமூக சேவைகளை செய்ததினாலும், 45 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வு வளம் பெற பெரும் முயற்சி செய்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியதால், 2004 ஆம் ஆண்டு அன்றைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் கரங்களால் “சிறந்த சமூக சேவகர்” விருதினை டெல்லியில் பெற்றார். மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசியக் கொள்கைகளை வகுக்க, டில்லியில் செப்டம்பர் 22, 2005ல் நடந்த கருத்தரங்கில், கருத்துருவாக்க வகுப்பாளராக கலந்து கொண்டார்.

வேலூர் மற்றும் திருவண்ணாமலையின் ப்ரெளட ப்ரமுக், வேலூர் ஜில்லா சேவா ப்ரமுக் என பல பொறுப்புகள் வகித்த பின்னர், சரஸ்வதி வித்யாலயா பள்ளியின் தாளாளராகவும், வித்யா பாரதியின் மாநில செயற்குழு உறுப்பினராகவும் கல்விப் பணியை தொடர்ந்து செய்து வந்தார்.

குடும்பங்கள் நலம் பெற, குடும்ப ஒற்றுமைக்காக ஆலோசனை வழங்குவது, பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இலவச டியூஷன் போன்ற பல கல்வி சேவைப் பணிகளை செய்வதுடன், மருத்துவ சேவைகளையும் வழங்கி வருகிறார். இதுவரை 14,000 கிராம மக்களுக்கு மருத்துவ முகாம்களை நடத்தியுள்ளார். எந்த முகாமிலும், மருத்துவத் துறையை பிரபந்தக்காக சிவசங்கரன் ஜியே இருப்பார்.

38 வருடங்களுக்கும் மேலாக, கிறிஸ்துவ நிறுவனத்தில் பணிபுரிந்த போதும், தினமும் நெற்றியில் ஹிந்து சமய அடையாளங்களுடனே செல்வார். அதனால் அவருக்கு பல இன்னல்கள் ஏற்பட்ட போதும், மனம் தளராது தொடர்ந்து அந்த நடைமுறையை கடைபிடித்து வந்தார். 1980ம் காலகட்டத்தில், அரக்கோணம் அருகில் இருந்த பழனிபேட்டையில், மாற்று மதத்தினரை தாய் மதம் திரும்பச் செய்தார். மதமாற்றம் எங்கு நடந்தாலும் அதனை தடுப்பதுடன், அவர்கள் மீண்டும் தாய் மதம் திரும்ப, பல கட்ட முயற்சிகளை மேற்கொள்வார்.

சங்கத்தின் மூத்த அதிகாரிகளான இராம கோபாலன் ஜி, வீரபாகு ஜி, சண்முகநாதன் ஜி, ராஜகோபாலன் ஜி, இல கணேசன் ஜி என பல ப்ராந்த, ஷேத்ர அதிகாரிகள் சிவசங்கரன் ஜியின் வீட்டிற்கு வருகை புரிந்துள்ளனர்.

1978 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி குணசுந்தரி அம்மாளை திருமணம் செய்த சிவசங்கர் ஜிக்கு, கோமளவள்ளி, தாரிணி என இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்கள் இருவருமே “சேவிகா சமிதி”யில் பயிற்சி முடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சேவைப் பணியுடன் சமுதாயப் பணியும் செய்து, குடியரசுத் தலைவரிடம் விருது பெற்ற சிவசங்கரன் ஜி, நம் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமான ஸ்வயம்சேவக்காக திகழ்கிறார்.

அ. ஓம்பிரகாஷ்