திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகாவில் 6 விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்டம், முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் ரத்து செய்யப்பட்டது. இதுதொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டத்தில் 645 ஹெக்டேர், 2,300 ஹெக்டேர் பரப்பில் உள்ள 2 சிப்காட் தொழிற்பூங்காக்களில் 68 நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. நேரடியாக 59 ஆயிரம் பேர், மறைமுகமாக 1.75 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். சிப்காட்டை விரிவாக்க மக்கள் கோரிக்கை விடுத்ததால், மேல்மா உள்ளிட்ட 8 கிராமங்களில் 3,174 ஏக்கர் நிலஎடுப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் 7 ஏக்கர் மட்டுமே நஞ்சை நிலம் ஆகும்.
இந்நிலையில், மேல்மா கிராம பட்டா நிலத்தில். தேத்துறை கிராமத்தை சேர்ந்த மேல்மா சிப்காட் விவசாயிகள் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பச்சையப்பன் தலைமையில், கடந்த ஜூலை 2 முதல் தொடர் போராட்டம் நடத்தினர். சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், கடந்த நவ.4-ம் தேதி மேல்மா சிப்காட் விவசாயிகள் எதிர்ப்பு இயக்க நிர்வாகி கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த அருள் மற்றும் 19 பேர் கைது செய்யப்பட்டனர். ஏற்கெனவே அதிக வழக்குகளில் தொடர்புடைய அருள் மற்றும் 6 பேர் குண்டர் சட்டத்தின்கீழ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர்.
குண்டர் சட்டத்தில் கைதான பச்சையப்பன், தேவன், சோழன், திருமால், மாசிலாமணி, பாக்கியராஜ் ஆகிய 6 பேர்குடும்பத்தினர், செய்யாறு எம்எல்ஏ ஆகியோர், அமைச்சர் எ.வ.வேலுவை சந்தித்து, குண்டர் சட்டத்தை ரத்து செய்ய மனுஅளித்தனர். மனுக்களை பரிசீலித்த முதல்வர் ஸ்டாலின், மேற்கண்ட 6 பேரையும் குண்டர் சட்ட நடவடிக்கையில் இருந்து விடுவிக்க உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில், 6 பேர் மீது திருவண்ணாமலை ஆட்சியர் பிறப்பித்த குண்டர் சட்ட உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.