செயலில் சிரத்தை

ஸ்ரீ குருஜி அவர்கள் ஆன்மிக வழிகாட்டுதலுக்காக, யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல், 1936 கோடைகாலத்தில் நாகபுரியிலிருந்து கிளம்பி கல்கத்தாவுக்கு அருகில் சாருகாச்சி என்ற ஊரில் உள்ள, ராமகிருஷ்ண ஆஸ்ரமத்தில் இருந்த சுவாமி அகண்டானந்தரிடம் சென்றடைந்தார். அந்த நேரத்தில் சுவாமி அகண்டானந்தர் தனது வயோதிக நிலையில் இருந்தார். பேராசிரியராக பணியாற்றி, பின்னர் வழக்கறிஞர் படிப்பும் முடித்திருந்த குருஜி, ஆசிரமத்திலிருந்த அனைத்து பணிகளையும் சிரத்தையுடன் செய்தார். சுவாமிஜியின் ஆடைகளை சுத்தம் செய்வது, உணவுக்கு ஏற்பாடு செய்வது, படுக்கையை சரி செய்வது போன்ற அனைத்தும் அவற்றில் அடங்கும். தரையை பெருக்குவது, பாத்திரங்களைத் துலக்குவது என்ற எந்த பணியையும் அவர் முழு ஈடுபாட்டுடன் செய்தார். அவர் துலக்கிய பாத்திரங்கள் அனைத்தும் ஆஸ்ரமத்துக்கு ஏதோ புதிய பாத்திரங்கள் வாங்கியிருக்கிறார்களோ என்று சந்தேகம் வரும் அளவில் இருந்தது. 1937 ஜனவரி 13 மகர சங்கராந்தி அன்று சுவாமி அகண்டானந்தரும், ஸ்ரீ குருஜிக்கு மந்திர தீட்சை அளித்து அருள்புரிந்தார்.