ஆகஸ்ட் 22 அன்று ஊரெல்லாம் ஒரே பரபரப்பு.. எங்கு பார்த்தாலும் போஸ்டர், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் மெசேஜ் வேறு! என்னவென்று பார்த்தால் அன்று “மெட்ராஸ் தினம்” என்றார்கள். 1639 ஆகஸ்ட் 22ல் தான் வெள்ளையன் சென்னை கடற்கரை அருகே இடத்தை வாங்க ஒப்பந்தம் போட்டானாம். அது தான் சென்னைக்கு பிறந்ததினம் என கூறி வருகிறது ஒரு கூட்டம். “திருவான்மியூர்”, “திருவொற்றியூர்”, “திருமயிலை” போன்ற ஊர்களின் பெயர்கள் தேவாரத்தில் இடம் பெற்றுள்ளன. “திருவல்லிக்கேணி” என்ற ஊரின் பெயர் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. “கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றி மூத்த குடி தமிழ்க் குடி” என முழங்கியதெல்லாம் என்ன ஆவது?
செங்குன்றம், மதுரவாயல், அம்பத்தூர், நங்கநல்லூர் என்று நீண்டிருக்கும் இன்றைய சென்னை பெருநகரத்தின் எல்லைகளுக்குள் ஏராளமான பாரம்பரிய கோயில்கள் அமைந்துள்ளன. ஒவ்வொன்றும் 1,000 முதல் 2,000 ஆண்டுகள் வரை சரித்திரத்தை தமிழ் கூறு நல்லுலகுக்கு பறைசாற்றுகின்றன. அதனால்தான் ‘தர்மமிகு சென்னை” என்று அழைத்தனர் நம் முன்னோர்கள்.
ஏதோ ஆங்கிலேயன் ஜார்ஜ் கோட்டையை கட்டிய பிறகுதான் சென்னையே உருவானது என்பது போல கொண்டாடுகின்றனர். ஆனால், 1673ம் ஆண்டு சென்னை காளிகாம்பாள் கோயிலுக்கு சத்ரபதி சிவாஜி வந்து வழிபட்டாரே? அதற்கு முன்பே அவரது குரு சமர்த்த ராமதாசர், பேட்டைதோறும் பஜனை கோயில்களையும், திரௌபதி அம்மன் கோயில்களையும் அமைத்தாரே? அந்த காலகட்டத்தில்தான் பல சனாதன சம்பிரதாயங்களின் திருமடங்கள் அமைந்தன; அப்போது நகரம் உருவாகவில்லையா என்ன?
அதேபோல, இந்த நகரத்தை உருவாக்க பல கோயில்களை ஆங்கிலேயர்கள் அழித்தார்களே, அதையும் சொல்ல வேண்டும் அல்லவா? கேசவப் பெருமாள் கோயில் இடிக்கப்பட்டு சென்னை உயர்நீதிமன்றமாகவும், கபாலீஸ்வரர் கோயில் சாந்தோம் சர்ச்சாகவும் உருமாறியதையும், ஆங்கிலேயர்களின் மதவெறியையும் சொல்ல வேண்டாமா? 18ம் நூற்றாண்டு பிற்பகுதியில் அன்றைய ‘ஐஸ் ஹவுஸ்’ (இப்போது ‘விவேகானந்தர் இல்லம்’) கட்டிடத்தில் தொழிலாளர்கள் ஆங்கிலேய கொடுமைகளுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய வரலாறு நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? (எழுத்தாளர் ஜெயமோகன் மட்டும் ‘வெள்ளை யானை’ என்ற நாவலை எழுதினார்). ஆங்கிலேயர்கள் வாழ்ந்த பகுதியை வெள்ளை நகரமாகவும், நம்மவர்கள் வாழ்ந்த பகுதியை கறுப்பர் நகரமாகவும் அழைத்து இனவெறியை வளர்த்தார்களே? 1870களில் சென்னையில் செயற்கையாக பட்டினியை உருவாக்கி நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் ரத்தத்தை உறிஞ்சி சென்ட்ரல் ரயில் நிலையம் உருவானதே? அந்த கொடுமைகளை இன்றைய இளைஞர்களும், மாணவர்களும் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்படுமா?
சென்னையில் நூறாண்டுகளுக்கு முன் கூவம், அடையாறு ஆகிய நதிகள், பல நூற்றுக்கணக்கான ஏரிகள், கணக்கற்ற குளங்கள் இருந்தன. கூவம் நதிக்கரையில் இருந்த திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோயில்களுக்கு அபிஷேகமே கூவம் தண்ணீரில்தான். ஆனால் இன்று கூவம் நதியும், அடையாறும் அந்தோ பரிதாபம், ஏரிகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். உண்மையில் குப்பைகளையும், கழிவுகளையும் நீர்நிலைகளில் கொட்டி நாசமாக்கியது ஆங்கிலேயர் ஆட்சி. நமது பாரம்பரிய முறையில் இருந்த கழிவு மேலாண்மையை சிதைத்துவிட்டு, அத்தனை குப்பைகளையும் நீர்நிலைகளில் கொட்டி சிதைத்ததுதான் ஆங்கிலேயர்கள் செய்த சாதனை! லண்டன் தேம்ஸ் நதியை குப்பையாக மாற்றியதே அவர்களின் கழிவு மேலாண்மை லட்சணத்தை சொல்லும்.
இதையெல்லாம் நாம் மறந்ததற்கு யார் காரணம்? குளிக்கச் செல்லும் ஒவ்வொருவரும் கைப்பிடி மண் எடுத்து கரையில் போடும் சரித்திரம் நம்முடையது அதனால்தான் ‘சென்னையில் ஒரு பகுதிக்கு அமிஞ்சிக்கரை’ என்று பெயர். நம்மூர் திராவிட மாடல் ஆட்சியாளர்களோ, ’அமைந்த
கரை’யாக மாற்றி வரலாற்றையே மறைத்துவிட்டனர்.
சட்டமன்றத்தில் ‘ஜெய்ஹிந்த்’ சொல்ல
வில்லை என்று உற்சாகமடைந்த
வர்களும், ஆங்கிலேயன் அடிமை மனப்பான்மையில் ஊறிய நீதிக்கட்சி அரசின் நூற்றாண்டை கொண்டாடியதும் இவர்கள் தானே?.
சென்னை மாநகரின் சில முத்துக்கள்
- இந்த மண்ணின் தெய்வங்கள் மல்லீஸ்வரர், கேசவப் பெருமாள்; இவர்கள் எழுந்தருளியுள்ள
சென்ன மல்லீஸ்வரர், சென்ன கேசவ பெருமாள் கோவில்களை இடித்தான் வெள்ளையன்.
சென்ன என்பதே இந்த நிலத்தின் பெயர். இதுவே சென்னை ஆனது என்கிறார் பசுத்தாய்
ஆசிரியர் கணேசன். - வெள்ளைக்காரன், நம்ம ஊரை அபகரித்த நாள் ஆகஸ்ட் 22 1639. இது நம் சுதந்திரம்
பறிக்கப்பட்ட நாள். இதை 20 ஆண்டுகளாக சிலர் கொண்டாடுவது, தியாகிகளுக்கு செய்யும் அவமரியாதை என்கிறார் எழுத்தாளர் கண்ணப்பன். - அண்ணா, அண்ணா, அண்ணா – எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா!”- என்று தொடங்கும்
தி.மு.கவினர் பாடும் பாடலில் – “சென்னை என்றொரு பெயர் மாற்றி செந்தமிழ்நாடென
சூட்டியவர்!” என்று வரும். அதாவது அண்ணாதுரை கருத்துப்படி சென்னை என்பது தமிழ் அல்ல. ஆனால் கருணாநிதி மதராஸ் என்பதை மாற்றி, தலைநகரை “சென்னை” என்று ஆக்கினார். இது முரண்பாடு அல்லவா என்று வினவுகிறார் சேலம் முரளி சீதாராமன். - ஹிந்துக்களுக்கு தொடர்ந்து அநீதி இழைக்கப்படுகிறது. சென்னையில் அன்னியன் கோயில் இடித்த விஷயத்தை இருட்டடித்து ஹிந்துக்கள் அறியாதபடி செய்துவிட்டார்கள் என்கிறார் திருச்சி வழக்கறிஞர் இளங்குமார் சம்பத்.
கோயிலைத் தகர்த்து கோர்ட் கட்டியது தப்பு அது சரிசெய்யப்பட வேண்டும் என்கிறார்
சென்னை வழக்கறிஞர் டி.வி. லட்சுமிநாராயணன்.
வெள்ளையன் கோயிலை இடித்த நாள்!
கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே, திருவள்ளுவர் வாழ்ந்திருக்கிறார், சென்னையில் உள்ள மயிலாப்பூரில் இருந்திருக்கிறார். ஏதோ ஆங்கிலேயர்கள் வந்த பிறகு தான் சென்னை உருவானது போல அபத்தமான பிம்பம் கட்டமைக்கப் பார்க்கிறார்கள் சென்னை உயர்நீதிமன்றம் உள்ள நிலம் வெள்ளையர் இடித்த கோயிலுக்கு சொந்தமானது என்பதை நினைவூட்டவே ஆண்டு தோறும் நவம்பர் மாதத்தில் ஒரு நாள், 24 மணி நேரமும் சென்னை உயர்நீதிமன்றம் மூடப்பட்டு அதன் சாவி கோயில் வசம் ஒப்படைக்கப்படுகிறது.