சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எதிரே 10 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.688 கோடி செலவில் 27 தளங்களை கொண்ட பிரம்மாண்டகட்டிடம் கட்டப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை நகரில் செயல்படுத்த உள்ள புதிய திட்டங்கள் குறித்து பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள அறிவிப்புகள் வருமாறு: சென்னை தீவுத்திடலில் இயற்கை வனப்புடன் கூடிய நகர்ப்புற பொது சதுக்கம், கண்காட்சி அரங்குகள், திறந்தவெளி திரையரங்கம் போன்ற நவீன சமூகக் கட்டமைப்பு வசதிகள் ரூ.104 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.
பூந்தமல்லிக்கு அருகில் 150 ஏக்கர் பரப்பளவில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் அதிநவீன திரைப்பட நகரம் உருவாக்கப்பட உள்ளது. சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரூ.64 கோடி செலவில் மேம்படுத்தப்படும். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எதிரே 10 லட்சம் சதுர அடிபரப்பளவில் ரூ.688 கோடி செலவில் 27 தளங்களை கொண்ட மரபுசார் வடிவமைப்புடன் கூடிய கட்டிடம் கட்டப்படும்.
பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் அருகில் உள்ள குறளகம் கட்டிடம் அமைந்துள்ள பகுதியில் ஒருங்கிணைந்த பன்முக போக்குவரத்து வசதிகள் கொண்ட பேருந்து நிலையம் மற்றும் உயர்தர நவீன வசதிகள் கொண்ட அலுவலக வளாகம் ரூ.823 கோடி செலவில் உருவாக்கப்படும். புற உலகச் சிந்தனையற்ற மதி இறுக்கம் உடையோருக்கான உயர்திறன் மையம் ரூ.25 கோடி மதிப்பீட்டில் சென்னையில் அமைக்கப்படும். புதிய ஒன்றிணைந்த வளாகம் ரூ.227 கோடி செலவில் சென்னையில் நிறுவப்படும். சர்வதேச கண்காட்சிகள், பன்னாட்டுக் கூட்டங்கள் நடத்திடும் வகையில் உலகத் தரம் வாய்ந்த கலைஞர் பன்னாட்டு அரங்கம் நவீன வசதிகளுடன் கிழக்கு கடற்கரைச் சாலையில் முட்டுக்காடு பகுதியில் 3 லட்சம் சதுரஅடி பரப்பளவில் கட்டப்பட உள்ளது.
சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் ரூ.147 கோடி செலவில் 3 லட்சம் சதுர அடி பரப்பளவில் 95 பி மற்றும் 133சி வகை குடியிருப்புகள் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மகளிர் பயன்பெறும் வகையில், சென்னையில் புதிய தோழி விடுதிகட்டப்படும். மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், ரயில்வே, வங்கிப் பணி தேர்வுகளில் இளைஞர்கள் அதிகம் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில், சென்னையில் உண்டு உறைவிட வசதியுடன் 6 மாத கால பயிற்சி அளிக்கப்படும்.
சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் ரூ.350 கோடி மதிப்பீட்டில் 22 நிரந்தர வெள்ளத் தடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை, சூளையில் உள்ள தேவாலயம் பழமை மாறாமல் புதுப்பிக் கப்படும் இவ்வாறு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.