சூறையாடப்பட்ட ராகுல் அலுவலகம்

கடந்த 2019 தேர்தலில் தன் சொந்தத் தொகுதியான அமேதியில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தால், கேரளாவில் வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு ராகுல் காந்தி வெற்றி பெற்றார். எனினும் தொகுதி மக்களின் நலனில் ராகுல் அக்கறை காட்டவில்லை எனகூறி அவருக்கு எதிராக கல்பேட்டா நகரில் இடதுசாரிகளின் மாணவர் பிரிவான இந்திய மாணவர் கூட்டமைப்பினர் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் வந்தவர்கள், ராகுல் காந்தியின் அலுவலகம் அருகே வந்த போது திடீரென வன்முறையில் ஈடுபட்டனர். ராகுலின் அலுவலகத்திற்குள் நுழைந்து அலுவலகத்தை அடித்து நொறுக்கி சூறையாடினர். இதற்கு காங்கிரஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ‘இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் சுமார் 100 எஸ்.எப்.ஐ செயற்பாட்டாளர்கள் இருந்தனர். அவர்களில் 8 பேர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்’ என காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், ”ஜனநாயக முறையில் போராட அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால், அது வன்முறையாக மாறக்கூடாது. வன்முறையில் ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை பாயும்” என்றார்.