சூடு பிடிக்கும் நேரடி விவாதம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் தன் தேர்தல் பிரச்சாரத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ‘எங்கள் மீது ஊழல் புகார் கூறும் ஸ்டாலின் என்னுடன் நேரடி விவாதத்திற்கு வரட்டும். திமுக ஆட்சியில் டெண்டரில் எப்படி ஊழல் நடந்தது என்று நான் கூறுகிறேன். துண்டுச் சீட்டு இல்லாமல் வந்து அவர் எழுப்பும் கேள்விகளுக்கு நான் பதில் கூறுகிறேன்’ என சவால் விட்டார். இதற்கு அறிக்கை மூலமாக பதில் கொடுத்த ஸ்டாலின், உச்ச நீதிமன்றத்தில் தடையாணை நீக்கம், ஆளுனரிடம் கொடுக்கப்பட்ட புகாரின் மீது நடவடிக்கை எடுக்கத் தடையில்லை என்றால் விவாதத்திற்கு தயார்’ என இரண்டு நிபந்தனைகளை வைத்தார். ஸ்டாலின் குறித்து நன்றாக அறிந்த முதல்வர், ‘ஏன் பயப்படுறீங்க… உச்ச நீதிமன்ற வழக்கை முடித்துவிட்டு வரும்படி சொல்வது ஏன்? தைரியம் இருந்தால் விவாதத்திற்கு வாங்க ஸ்டாலின்’ என மீண்டும் அழைப்பு விடுத்தார். ஸ்டாலின் சென்றால் என்ன நடக்கும் என்பதை அறிந்த திமுக எம்.பி., ராசா, நான் விவாதத்திற்கு வருகிறேன் என கூறியுள்ளார். மேலும், முதலமைச்சரிடம் 30 ஏக்கர் நிலம் உள்ளது. என்னிடம் 3 ஏக்கர் நிலம்கூட இல்லை. நான் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளேன் என கூறி செய்தியாளர்களை திகைக்க வைத்துள்ளார். ‘இவர் மீது 2ஜி வழக்கில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி பணத்தை ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால் அவரிடம் 3 ஏக்கர் நிலம் கூட இல்லை என்று கூறுவது மிகப்பெரிய பொய்’ என நெட்டிசன்கள் விமர்சனங்களை வைக்கின்றனர்.