சுவாமி அகண்டானந்தர் ஸ்ரீராமகிருஷ்ணரின் நேரடிச் சீடரும், சுவாமி விவேகானந்தரின் சகோதரத் துறவியும் ஆவார். இவரது இயற்பெயர் கங்காதர் கங்கோபாத்யாயர். இவரது பெற்றோர் ஸ்ரீமந்த கங்கோபாத்யாயர், வாமசுந்தரி. இவரது தந்தை புரோகிதரும் சமஸ்கிருத ஆசிரியருமாக இருந்தவர். 1877ம் ஆண்டு பாக்பஜாரிலுள்ள தீனநாத்பாசு வீட்டிற்கு சென்றிருந்த போது இறையுணர்வில் ஒன்றியிருந்த ராமகிருஷ்ண பரமஹம்சரை முதன்முதலில் பார்த்தார். 1883ல் அவரை சந்தித்தார். திபெத், இமயமலைப் பிரயாணங்களை மேற்கொண்டவர். திபெத் மொழியை பதினைந்து நாட்களில் கற்றுக் கொண்டார்.
வங்காளத்தில் மூர்ஷிதாபாத் மாவட்டத்தில் நிலவிய கடும் பஞ்சத்தை கண்ட சுவாமி அகண்டானந்தர், தம்மால் பெரிதாக எந்த உதவியும் செய்ய முடியவில்லையே என ஏங்கினார். 1897 மே 1ம் தேதி, சுவாமி விவேகானந்தர் ராமகிருஷ்ண மிஷனை ஆரம்பித்தபோது பஞ்ச நிவாரணப் பணியை மேற்கொள்ளும் தீர்மானமும் எடுக்கப்பட்டது. இதுதான் ராமகிருஷ்ண மிஷனின் முதல் நிவாரணப் பணி. இப்பணிக்காக சுவாமி அகண்டானந்தர் கொல்கத்தா, சென்னை நண்பர்களுக்கு கடிதம் எழுதி உதவி பெற்றார். பஞ்சம் பாதிக்கப்பட்ட மாவட்ட நீதிபதிகளும் இவருடன் இணைந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ள முன்வந்தனர். 1898 ஜூன் 15ல் சுவாமி விவேகானந்தரும் பாராட்டி கடிதம் எழுதி ஊக்குவித்தார்
இவர் ஒருமுறை இமயமலை சாரலில் உள்ள ஒரு சிறு கிராமத்தின் வழியே நடந்து சென்று கொண்டிருந்தார். கடுமையான கோடைகாலம், மக்கள் குடிநீருக்காக அல்லாடிக் கொண்டிருந்தனர். சிறு பானைகளில் வெகு தூரத்தில் இருந்து குடிநீரை தலையில் சுமந்து கொண்டுவந்து தாகம் தீர்த்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு சிறுமி கொண்டுவந்த குடிநீர் பானை கால் இடறியதால் கீழே விழுந்து உடைந்து நீர் வீணானது. சிறுமிக்கோ இக்கட்டான நிலை. குடிக்க வேறு தண்ணீர் இல்லை, வீட்டிலோ வேறு பானையும் இல்லை. என்ன செய்வது என்று தெரியாது ஓ..வென கதறி அழுது கொண்டிருந்தாள். அப்போது அந்த மக்களின் பரிதாப நிலையை கண்டு மனம்நெகிழ்ந்த சுவாமி அகண்டானந்தர், அந்த பகுதி மக்களின் முன்னேற்றத்திற்காக அங்கேயே ஆசிரமம் அமைத்துத் தங்கி, அப்பகுதி மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டார். இவரின் ஆசிரமத்தில்தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இரண்டவது தலைவர் பூஜணிய குருஜி , சிலகாலம் தங்கி இருந்து சுவாமி அகண்டானந்த்த்ரிடம் சன்யாச தீட்சை பெற்று கொண்டார்.